ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை; சில தினங்களில் அணிகள் இணையும்?


ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை; சில தினங்களில் அணிகள் இணையும்?
x
தினத்தந்தி 18 Aug 2017 6:00 AM IST (Updated: 18 Aug 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென அறிவித்தார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக ஜெயலலிதா திறம்பட பணியாற்றி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 5-12-2016 அன்று தன் இன்னுயிரை நீத்தார்.

பல்வேறு அமைப்புகள் மற்றும் பல தரப்பினரிடம் இருந்தும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்த பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும்.

ஜெயலலிதா, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 6 முறை திறம்பட பணியாற்றி தமிழ்நாட்டின் நலனுக்காக தன் இன்னுயிரை ஈந்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அல்லும், பகலும் அயராது பாடுபட்ட உன்னத தலைவராய் ஜெயலலிதா அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்’ இல்லத்தை நினைவு இல்லமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. ஜெயலலிதாவின் சிறப்புகளையும், நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும் பொதுமக்கள் அறியும் வண்ணம், ஜெயலலிதா சிறப்பாக வாழ்ந்த, சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள, ‘வேதா நிலையம்’ அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் 2 கோரிக்கைகளும் ஏற்கப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே, இன்னும் சில தினங்களில், அ.தி.மு.க. இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருப்பார்கள் என தெரிகிறது. ஆட்சியை பொறுத்தவரை, முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடருவார். துணை முதல்-அமைச்சர் பதவி ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட இருக்கிறது. மேலும், இலாகாக்களையும் இருவரும் சமமாக பிரித்துக்கொள்ள இருக்கிறார்கள். அமைச்சர்களுக்கும் பொறுப்புகள் பிரித்து கொடுக்கப்பட உள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story