அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் ஆலோசனை
அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளார்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்- அமைச்சராகவும் இருந்து வந்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.
அவரது மரணத்திற்கு பிறகு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் என அ.தி.மு.க.வில் 2 அணிகள் உருவாகின. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தனியாக செயல்படத் தொடங்கினார்கள். என்றாலும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். ஆட்சியை 5 ஆண்டுகளும் முழுமையாக தொடர வேண்டும் என்ற நிலையில், 2 அணிகளையும் இணைப்பதற்கான வேலைகள் தொடங்கின.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், “சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்ற 2 கோரிக்கைகளை பிரதானமாக வைத்தனர். இந்த கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்காததால், பேச்சு வார்த்தை தொடங்கும் முன்பாகவே இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி அணியிலும் சலசலப்பு ஏற்பட்டு, கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை, கட்சியை விட்டு ஒதுக்கிவைப்பதாக அறிவித்தனர்.
இதுகுறித்து, கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர், “எங்களது ஒரு கோரிக்கையில் பாதி அளவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மற்றொரு கோரிக்கையான ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த உடனே உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தி கூறினர்.
இந்த நிலையில், நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள, ‘வேதா நிலையம்’ அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் 2 கோரிக்கைகளும் ஏற்கப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே, இன்னும் சில தினங்களில், அ.தி.மு.க. இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோன்று முதல்-அமைச்சர் பழனிசாமி, முக்கிய அமைச்சர்களுடன் சற்று முன்பு ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோருடன் தனது இல்லத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இருதரப்பினரும் சந்தித்து, இரு அணிகளும் இணைய உள்ளது. 7.30 மணியளவில் இரு அணிகள் இணைப்பு நடைபெறுகிறது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிங்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story