தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் ராம.கோபாலன் அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று ராம.கோபாலன் தெரிவித்தார்.
சென்னை,
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகம் முழுவதும் கடந்த 33 ஆண்டுகளாக இந்து முன்னணி பேரியக்கத்தால் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்த ஆண்டு வருகிற 25–ந்தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட உள்ளது.
சுமார் 10 ஆயிரம் பகுதிகளில் வீதி உலாவும், 300–க்கும் அதிகமான முக்கிய ஊர்களில் சிலை கரைப்பு ஊர்வலமும் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் எல்லா இடங்களிலும் 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை சமுதாயத்தை ஒருங்கிணைத்து அன்னையர் தினம், சிறுவர்கள் தினம், சமுதாய நல்லிணக்க தினம் என ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
அதேபோல், மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், கோ பூஜை, துளசி பூஜை, திருவிளக்கு வழிபாடு முதலியவற்றோடு சமய, சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கிறது. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 501 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.
அடுத்த மாதம் (செப்டம்பர்) 3–ந்தேதி வழக்கம்போல 3 சென்னை மாவட்டங்களில் இருந்தும் 3 ஊர்வலங்களாக புறப்பட்டு பட்டினப்பாக்கம் சீனிவாச கடற்கரை, பாலவாக்கம் பல்கலைநகர் கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும்.
விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழ்நாட்டில் மட்டும் பிரச்சினை வருகிறது. நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யமாட்டோம். எங்களுக்கும் யாரும் தொந்தரவு கொடுக்கக்கூடாது. குறிப்பிட்ட தேதியில் திட்டமிட்டப்படி அனைத்து நிகழ்வுகளும் நடக்கும். நாங்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story