மேகதாதுவில் அணைகட்ட தமிழக அரசு ஒப்புதல் அளிப்பதா? அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்


மேகதாதுவில் அணைகட்ட தமிழக அரசு ஒப்புதல் அளிப்பதா? அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
x
தினத்தந்தி 19 Aug 2017 3:00 AM IST (Updated: 19 Aug 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணைகட்ட சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறி அதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

இது குறித்து தி.மு.க. முதன்மைச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அருகே ஓர் அணையை கட்டலாமா? அப்படி கட்டப்பட்ட அணையின் மிகை நீரை தேக்கி வைத்து தமிழ்நாட்டுக்கும் தரலாமே?” என்று ஒரு யோசனையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தபோது, தமிழக அரசின் சார்பில் வாதாடிய வக்கீல் சேகர் நாப்டே, “தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவதில் தடையில்லை என்றால், கர்நாடகம் காவிரியில் புதிய அணை கட்ட எந்த எதிர்ப்பும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

தமிழக அரசின் சார்பில் வாதாடிய வக்கீல், இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருப்பது தமிழ்நாடு தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். இப்படி ஒரு கருத்தை தமிழக அரசு சார்பில் தெரிவிக்கும் முன்பு, தமிழக அரசின் கருத்தை அந்த வக்கீல் கேட்டாரா? முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தானே பொதுப்பணித் துறை அமைச்சர். அவர் மேகதாது அணைக்கு ஒப்புதல் தெரிவிக்க வக்கீலுக்கு அனுமதி கொடுத்தாரா? அப்படி அனுமதி கொடுக்கும் முன்பு அமைச்சரவையை கலந்து ஆலோசித்தாரா?

இப்படி ஒரு கருத்துக்கு ஒப்புதல் அளிக்கும் முன்பு, சட்டமன்றத்தையோ அல்லது தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களையோ, தமிழக அரசு கலந்து பேசியிருக்க வேண்டாமா? இவை ஏதும் நடைபெறாமல், தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல் மேகதாது அணை கட்ட தமிழக அரசு சார்பில் ஒப்புக்கொண்டது தமிழகத்துக்கு செய்த மாபெரும் துரோகம்.

இதனால் தஞ்சை ‘சகாரா’வாகும், காவிரி டெல்டா பகுதி காய்ந்து போன காடாகும். எனவே அ.தி.மு.க. அரசின் இந்த செயலை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உச்சநீதிமன்றத்தில் காவிரி நதி நீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு நடந்து கொண்டுள்ள விதம் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரை கர்நாடகம் வழங்குமேயானால் காவிரியின் கர்நாடக எல்லையில் மேகதாதுவில் அணைகட்டிக் கொள்ள எங்களுக்கு ஆட்சேபணையில்லை என்று தமிழ்நாடு அரசின் வழக்குரைஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த அரிய சந்தர்ப்பத்தை கர்நாடக அரசு நழுவ விடுமா?

இந்த முடிவுக்காக தமிழ்நாடு அரசு கடும் விலை கொடுத்தாக வேண்டும்; ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்த்து நிற்கப் போகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நதி பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடி வரும் வக்கீல் சேகர் நாப்டே, மேக தாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தமிழகம் எதிர்க்கவில்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.

மத்திய அரசாலும், கர்நாடக அரசாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட தமிழகத்தை, தமிழ்நாடு அரசும் சேர்ந்து வஞ்சித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் உடன் தலையிட்டு, இக்கருத்தை திரும்ப பெற வேண்டும் எனவும், கர்நாடகம் புதிய அணை கட்டுவதை தடைசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகதாதுவில் அணையை கட்டி தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் சதித்திட்டத்துக்கு தமிழ்நாட்டுக்காக ஆஜராகும் வக்கீல்கள் ஒப்புதல் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக தமிழ்நாட்டு நிலையை தெளிவுபடுத்த வேண்டும். கர்நாடகம் கட்ட உள்ள அணைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Next Story