எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி சென்னையில் 21-ந் தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி சென்னையில் 21-ந் தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2017 1:30 AM IST (Updated: 19 Aug 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி சென்னையில் 21-ந் தேதி ம.தி.மு.க. சார்பில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தனது ஆட்சியின்போது தமிழக நதிநீர் உரிமைகளை மத்திய அரசிடமோ, சுப்ரீம் கோர்ட்டிலோ இம்மி அளவும் விட்டுக்கொடுக்காமல் தமிழகத்தைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டில் முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும், காவிரி பிரச்சினையிலும் தமிழ்நாடு சார்பாக வாதாடிய வக்கீல்களை கலந்து ஆலோசித்து சட்டப்பூர்வமான வாதங்களை முன்வைப்பதற்கு ஆலோசனைகள் வழங்கி, தமிழக உரிமைகளைக் காக்க உறுதியுடன் போராடினார்.

ஆனால், தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றுள்ள அரசு, தமிழ்நாட்டின் பாசன உரிமைகளை காவு கொடுத்து மேகதாதுவில் அணை கட்டிக்கொள்ளலாம் என்று தமிழ்நாட்டின் சார்பில் வாதாடிய வக்கீல் சேகர் நாப்டே கூறியதற்கு பின்னணி என்ன?.

இதைவிட தமிழ்நாட்டுக்கு மன்னிக்க முடியாத பச்சை துரோகத்தை எவரும் செய்தது இல்லை. எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதல்-அமைச்சராக பொறுப்பில் நீடிக்கும் தார்மீக தகுதியையும், உரிமையையும் இழந்துவிட்டார்.

எனவே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 21-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தலைநகர் சென்னையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நடைபெறும் இந்த அறப்போரில் கட்சி தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும், விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story