வேலூர் சிறையில் நளினி-முருகன் உருக்கமான சந்திப்பு


வேலூர் சிறையில் நளினி-முருகன் உருக்கமான சந்திப்பு
x
தினத்தந்தி 1 Sept 2017 3:15 AM IST (Updated: 1 Sept 2017 12:03 AM IST)
t-max-icont-min-icon

உண்ணாவிரதத்தை கைவிட்ட நிலையில் முருகன் தனது மனைவி நளினியை சந்திக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

வேலூர்,

உண்ணாவிரதத்தை கைவிட்ட நிலையில் முருகன் தனது மனைவி நளினியை சந்திக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இருவரும் நேற்று 1 மணி நேரம் உருக்கமாக சந்தித்து பேசினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரது சிறை சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே அவரது மனைவியும் முருகனின் உயிரை காப்பாற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முருகன் மற்றும் நளினியிடம் சிறைத்துறை டி.ஐ.ஜி. பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் போது தனது மனைவியை சந்திக்கவும், தன்னை உறவினர்கள் பார்க்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று முருகன் கோரிக்கை விடுத்தார். முருகனின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.ஐ.ஜி. பாஸ்கரன் கூறினார்.

கோரிக்கைகள் ஏற்கபட்டதால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அதைத்தொடர்ந்து அவரது மனைவி நளினியும் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

இந்த நிலையில், முருகன் தனது மனைவி நளினியை சந்திக்க சிறைத்துறையினர் சிறப்பு அனுமதி வழங்கினர். அதன்படி நளினியை பார்ப்பதற்காக முருகனை, நேற்று காலை 10.15 மணிக்கு, ஜெயில் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் பலத்த காவலுடன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நளினி-முருகன் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. அப்போது முருகனை பார்த்ததும், நளினி கதறி அழுததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் உருக்கமாக பேசிக்கொண்டதாக தெரிகிறது. பிறகு, 11.15 மணி அளவில் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் முருகனின் வக்கீல் புகழேந்தி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்ட பின் அவர் வழக்கமாக சாப்பிடும் உணவுகளை சாப்பிடுகிறார். முருகனின் சிறைச்சலுகைகள் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கி, மீண்டும் சிறை சலுகைகளை சிறைத்துறையினர் முருகனுக்கு வழங்கி உள்ளனர்‘ என்றார்.

Next Story