மாணவி அனிதா தற்கொலை தமிழகம் முழுவதும் போராட்டம்-மறியல்


மாணவி அனிதா தற்கொலை தமிழகம் முழுவதும் போராட்டம்-மறியல்
x
தினத்தந்தி 2 Sept 2017 2:54 PM IST (Updated: 2 Sept 2017 2:54 PM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய- மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

கோவை, 

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய- மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. கோவை காந்திபுரம் அரசு விரைவு பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் திரண்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் திடீரென பிரதமர் மோடியின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டனர்.உடனே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஓடிச் சென்று மோடியின் உருவ பொம்மையை பறித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (தேசிய மாணவர் இயக்கம்) சார்பில் கோவை ரெயில் நிலையத்துக்குள் சென்று ரெயிலை மறிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 14 பேரை கைது செய்தனர்.

பொள்ளாச்சி காந்தி சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரையில் மாணவர் அமைப்புகள் சார்பில் பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள கட்ட பொம்மன் சிலை முன்பு திடீர் சாலைமறியல் போராட்டம் நடந்தது. மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பெரியார் பஸ் நிலைய பகுதியில் 1 மணிநேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே போலீசார் மறியல் செய்தவர்களை கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.

போராட்டம் தொடர்ந்ததால் போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மறியல் செய்த பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகம் அருகே பிரதமர் மோடியின் உருவ பொம்மையை திராவிடர் கழகத்தினர் எரிக்க முயன்றனர்.அவர்களிடம் இருந்து உருவ பொம்மையை போலீசார் பிடுங்கினர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் செய்த 3 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை கண்டித்து கோவை வ.உ.சி. மைதானத்தில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்த போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வ.உ.சி. மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நெல்லை டவுணில் இந்திய இளைஞர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அனிதா படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.இன்று காலை பாளை பஸ்நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று அனிதா படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாளை வ.உ.சி.மைதானத்திற்கு திரண்டு வருகிறார்களா என போலீசார் கண்காணித்தனர். இதற்காக வ.உ.சி. மைதானத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் நுழைவுவாயில் அருகே தஞ்சை- நாகை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


சென்னை அண்ணாசாலையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவக் கலந்தாய்வு நடைபெறுவதால் போராட்டக்காரர்கள் அப்பகுதிக்குள் நுழையமுடியாது வண்ணம் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சிகர மாணவர் அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர். சாலையில் விடாப்பிடியாக அமர்ந்திருந்தவர்களை போலீஸார் பலவந்தமாக இழுத்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.


Next Story