சென்னை கல்லூரியில் சேரவந்த ஏழை எம்.பி.பி.எஸ். மாணவிக்கு கேரள முதல்-மந்திரி உதவி
சென்னை கல்லூரியில் சேரவந்த ஏழை எம்.பி.பி.எஸ். மாணவிக்கு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் உடனடியாக உதவினார்.
சென்னை,
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள எலமேடு பகுதியை சேர்ந்தவர் ரேவதி. ஏழை மாணவியான இவர் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இருந்தார். இதைத் தொடர்ந்து நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் மாணவி ரேவதி பங்கேற்றார்.
அவருக்கு சென்னை கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.
நேர்முகத் தேர்வுக்குச் சென்னை வந்திருந்த ரேவதியிடம் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இல்லை. அடுத்த முறை வருகையில் தகுதிச் சான்றிதழும் சாதிச் சான்றிதழும் சமர்ப்பிப்பதாக ரேவதியின் பெற்றோர் அதிகாரிகளிடம் மன்றாடினர். விரைவில் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதாக ரேவதியின் பெற்றோர் கூறினர். ஆனால் அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் ரேவதி தவித்தார். ஏழை மாணவியான ரேவதியின் படிப்புக்கு கேரள மாநில முந்திரி உற்பத்தி நிறுவனத் தலைவர் ஜெயமோகன் நிதியுதவி செய்துவந்தார். ரேவதியின் பெற்றோர் அவரைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னார்கள்.
உடனடியாக இந்த தகவல் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அவர் செப்டம்பர் 4-ந் தேதிக்குள் மாணவியின் சான்றிதழ்கள் அனைத்தும் ஒப்படைக்கப்படும் என்று மாநில உயர் அதிகாரிகள் மூலம் மருத்துவ கல்லூரி நிர்வாகத்துக்கு உறுதி அளித்தார். இதையடுத்து மாணவி ரேவதி மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டார். முதல்-மந்திரி பினராயி விஜயனின் உடனடி நடவடிக்கையை மாணவியின் பெற்றோர் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டி உள்ளனர். முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
Related Tags :
Next Story