கே.ஆர்.பி. அணையில் தண்ணீர் திறப்பு 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை


கே.ஆர்.பி. அணையில் தண்ணீர் திறப்பு 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Sept 2017 2:31 PM IST (Updated: 4 Sept 2017 2:30 PM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.பி அணை நிரம்பியதால், அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 1360 கனஅடி தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதனால் பாத்தக் கோட்டா தரைப்பாலம் தண்ணீரில் முழ்கியது. பாத்தக்கோட்டா, ராமாபுரம், ஆழியாளம், குக்கலப்பள்ளி உட்பட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.ஆர்.பி. அணைக்கு வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும். தற்போது அணையில் 51  அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 3,020 கனஅடியாக உள்ளது. இதில் கால்வாய் வழியாக 139 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 3,139 கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கிருஷ்ணகிரி அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

6 ஆண்டுக்கு பிறகு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த தென்பெண்ணை ஆற்று கரையோரத்தில் வசிக்கக் கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வீணாக கடலில் கலக்கும் தென்பெண்ணை ஆற்று நீரை ஏரி, குளங்களில் சேமிக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story