தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவ. 17-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்


தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவ. 17-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 Sept 2017 5:45 AM IST (Updated: 5 Sept 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்து,

சென்னை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.

இந்த தேர்தல் அறிவிப்பை எதிர்த்து தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை முறையாக பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்கிறேன். புதிய தேர்தல் அறிவிப்பை சட்டப்படி பிறப்பித்து, டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி உத்தரவிட்டார்.
மேலும் தேர்தலை நடத்துவது தொடர்பாக 9 நிபந்தனைகளை தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் பிறப்பித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில், தமிழக அரசும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் மேல்முறையீடு செய்தது.
அதேபோல, உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிடக்கோரி தி.மு.க.வும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கூடாது என்று மாற்றம் இந்தியா அமைப்பும், துணை மேயர், ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வக்கீல் பழனிமுத்துவும் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்க தயாராகினர். அப்போது தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண்ஆஜராகி, ‘தமிழக அரசு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்யும் பணியை தொடங்கிவிட்டது. இது தொடர்பாக புதிதாக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, இந்த சூழலில் தற்போது தீர்ப்பளிக்க வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து அட்வகேட் ஜெனரலின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
சமூகத்தின் உயிர் நாடியாக உள்ளாட்சி அமைப்புகள் திகழ்கின்றன. அதனால், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். தற்போது சுமார் ஒரு ஆண்டு காலம் வீணடிக்கப்பட்டு விட்டது.

ஆனால், தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் வேறுவிதமான காரணங்களை கூறுகிறார். ‘145 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. வடகிழக்கு பருவ மழை பொய்த்து விட்டது.

குடிநீர் தட்டுப்பாடு குறித்து தமிழகம் முழுவதும் இருந்தும் பல லட்சம் புகார்கள் அரசுக்கு வந்துள்ளன. அதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, அந்த பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகின்றன. மேலும் தென்மேற்கு பருவ மழையும் தற்போது பொய்த்து விட்டது. இதனால், வறட்சி நிவாரண பணியில் அரசு எந்திரம் முழுவதும் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளது என்று அட்வகேட் ஜெனரல் கூறுகிறார்.

மேலும், ‘உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றால், 16 ஆயிரத்து 748 தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளும், 4.36 லட்சம் ஓட்டுப்பதிவு அதிகாரிகளும் தேவை. தற்போது அரசு அதிகாரிகள் எல்லோரும் வறட்சி பணியில் ஈடபட்டுள்ளனர். வார்டு மறுவரையறை செய்யும் பணி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் நடத்தினால், தேர்தலுக்காக செலவு செய்யப்படும் பெரும் தொகை, அதாவது ரூ.175 கோடி வீணாகி போய்விடும்.

தற்போது வார்டு மறுவரையறை செய்யும் பணி தொடங்கிவிட்டது. இந்த பணி டிசம்பர் மாதம் 4-வது வாரத்தில் முடிவடையும். அதன்பின்னர், 2018-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்து விடலாம். அதன்பின்னர் வார்டு உறுப்பினர்கள் ஓட்டுப்போடும் மறைமுகத் தேர்தல், பிப்ரவரி 15-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டுவிடும்’ என்றும் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

ஆனால், இவர் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 243(இ), மற்றும் 243(யு)-வின் படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். மனிதர்களாக உருவாக்கக் கூடிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகள் ஆகியவை அரசு எந்திரங்களை பாதிக்கச் செய்யும். அவற்றை எல்லாம் விதிவிலக்கான சூழ்நிலைகளாக கருத வேண்டும்.

ஆனால், இந்த காரணங்களை கூறி, உள்ளாட்சி தேர்தலை தள்ளி போடுவதை நியாயப்படுத்த முடியாது. எனவே, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்க வேண்டும் என்பது எங்களது கருத்தாகும்.

பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவதுபோல, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் மாநில தேர்தல் ஆணையமும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

தமிழகத்தில் மழை பெய்யாததால், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கருதுகிறோம். அதனால், உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. வறட்சியினால் தேர்தலை நடத்த முடியாது என்று கூறினாலும், தமிழக அரசின் பிற நடவடிக்கைகள், அதாவது அரசு விழாக்கள், நினைவு நாள் கடைப்பிடிப்பது போன்ற நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன. எனவே, வறட்சி நிவாரண பணிக்கு குறிப்பிட்ட அளவில் அதிகாரிகளை நியமித்தாலும், பிற அதிகாரிகளை கொண்டு, உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கலாம்.

உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் நடந்த நாளில் இருந்து 5 ஆண்டுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று சட்டம் தெளிவாக கூறுவதால், இதற்கு மேலும் காலம் தாழ்த்த முடியாது. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும். எனவே, வருகிற 18-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை கண்டிப்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை வருகிற நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

மேலும், வார்டு மறுவரையறை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு வருகிற 6-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே, தற்போது நாங்கள் பிறப்பித்துள்ள இந்த தீர்ப்பு, வார்டு மறுவரையறை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் முடித்து வைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Next Story