ஆரணி அருகே, சாராய வழக்கில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் சாவு


ஆரணி அருகே, சாராய வழக்கில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் சாவு
x
தினத்தந்தி 5 Sept 2017 3:00 AM IST (Updated: 5 Sept 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே சாராய வழக்கில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டவர் திடீரென இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது பஸ் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 40). சாராயம் விற்பனை செய்வதாக இவர் மீது களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று ஆரணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏழுமலையின் குழந்தைகளுக்கு காதணி விழா நடப்பதாகவும், இதற்காக அவர் வந்திருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று திருமண மண்டபத்தில் இருந்த ஏழுமலையை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்திற்கு சென்ற சிறிது நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏழுமலை ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டார்.

இந்த சம்பவம் காட்டுத் தீ போல் பரவியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஏழுமலையின் உறவினர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருடன், ஏழுமலையின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஏழுமலையை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்து ஆரணி-போளூர் சாலையில் மலையாம்பட்டு கூட்ரோட்டில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலையில் மரங்களை வெட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற 2 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மருத்துவமனையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட ஏழுமலையை அடையாளம் தெரியாத ஒருவர் மருத்துவமனையில் சேர்த்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஏழுமலையின் உறவினர்கள் கேட்டதற்கு ஏழுமலைக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், உடனே அவருடைய உறவினர் என்று வந்திருந்த ஒருவருடன் ஏழுமலையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் ஏழுமலையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நபர் யார் என்று தெரியவில்லை. இதனால் இந்த சம்பவம் ஏழுமலையின் உறவினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏழுமலையின் வேட்டி கசங்கியிருந்ததால் அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். போராட்டம் நடந்த இடத்தில் பதற்றம் அதிகரித்தது.

இதனையடுத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன், செய்யாறு உதவி கலெக்டர் கிருபானந்தம், ஆரணி தாசில்தார் சுப்பிரமணி ஆகியோர் மறியல் நடந்த இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏழுமலையை விசாரணைக்கு அழைத்து சென்ற 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மறியலை கைவிட மறுத்துவிட்டனர்.

அதைத்தொடர்ந்து அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். 7 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் இரவு 9 மணி வரை நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போக்குவரத்து மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டது.

Next Story