தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கி சட்டம் கொண்டு வரவேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கி சட்டம் கொண்டு வரவேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Sept 2017 4:30 AM IST (Updated: 5 Sept 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக செயல்படும் அரசியல் கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, அக்கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை

சென்னை,

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வழங்கும் விதமான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், அரும்பாக்கத்தை சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மதம், சாதி ரீதியாக செயல்படும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பினேன். இதற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி பதிலளித்த இந்திய தேர்தல் ஆணையம், ‘அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை’ என்று தெரிவித்துள்ளது. இந்த பதிலை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 29ஏ ஆகியவை அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான அதிகாரத்தை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது. ஆனால், கட்சியின் பதிவை ரத்து செய்வதைப் பற்றி எதுவும் அதில் கூறப்படவில்லை. அதனால், சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, அக்கட்சியின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வேண்டும். அந்த அதிகாரம் அளிக்கும் விதமாக சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கடந்த 1998-ம் ஆண்டு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், விதிகளை மீறிசெயல்படும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஏதுவாக தேர்தல் ஆணையம் 1998-ம் ஆண்டு அனுப்பியுள்ள பரிந்துரையை ஏற்று விரைவில் சட்டம் வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story