மாணவி வளர்மதி மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு


மாணவி வளர்மதி மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Sept 2017 2:30 AM IST (Updated: 6 Sept 2017 12:01 AM IST)
t-max-icont-min-icon

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சேலம் மாணவி வளர்மதியை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ் கமி‌ஷனர் உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

சென்னை,

சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி. இவர், நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டு பிரசுரத்தை வினியோகித்து, மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக கடந்த ஜூலை மாதம் சேலம் போலீசார் கைது செய்தனர்.

பின்னர், தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறி, வளர்மதியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து சேலம் போலீஸ் கமி‌ஷனர் கடந்த ஜூலை மாதம் 17–ந் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து வளர்மதியின் தந்தை மாதையன், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘என் மகள் வளர்மதியை அரசியல் காரணங்களுக்காக குண்டர் தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். முறையான அனுமதியை பெற்று, சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் என் மகள் போராட்டங்களில் ஈடுபட்டார். இவ்வாறு போராட்டம் நடத்த அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை உள்ளது. எனவே வளர்மதியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது வளர்மதியை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ததை நியாயப்படுத்தி, போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், நேற்று தீர்ப்பு அளித்தனர்.

அதில், ‘குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வளர்மதியை கைது செய்துள்ள விவரங்களை அவரது உறவினர் அல்லது நண்பர்களுக்கு போலீசார் முறையாக தெரியப்படுத்தவில்லை. குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வளர்மதியை கைது செய்ததை எதிர்த்து அவரது தந்தை கொடுத்த கோரிக்கை மனுவையும் உரிய காலத்துக்குள் போலீசார் பைசல் செய்யவில்லை. அதனால், மாணவி வளர்மதியை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமி‌ஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story