அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் கவர்னர் தலையிட முடியாது ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் வாதம்


அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் கவர்னர் தலையிட முடியாது ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் வாதம்
x
தினத்தந்தி 6 Sept 2017 3:45 AM IST (Updated: 6 Sept 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மீது 19 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை இல்லை என்று கூறுவது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம், இதில் கவர்னர் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் வாதிட்டார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக்கூறி 19 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதுகுறித்து கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆனால், இதுவரை பெரும்பான்மையை சட்ட சபையில் நிரூபிக்கும்படி, முதல்-அமைச்சருக்கு, கவர்னர் உத்தரவிடவில்லை. சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், இதுதொடர்பாக கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இந்த சூழலில், கவர்னர் தனது கடமைகளை செய்ய தவறிவிட்டார்.

எனவே தமிழக முதல்-அமைச்சர் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும். இதுகுறித்து கவர்னருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக கவர்னர் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் தமிழக அரசு தற்போது இல்லை. 19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சருக்கு எதிராகத்தான் கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். தமிழக அரசுக்கு எதிராக கடிதம் கொடுக்கவில்லை’ என்று வாதிட்டார்.

மேலும் தன் வாதத்தில், ‘இது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். இதில் கவர்னர் தலையிட முடியாது. கவர்னருக்கு மனு அனுப்பிய மு.க. ஸ்டாலின் வேண்டுமென்றால் வழக்கு தொடரலாம். முதல்-அமைச்சர் தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று 3-வது நபர் பொதுநல வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து முடிவு செய்ய விசாரணையை அக்டோபர் 3-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story