அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் தலைமை செயலாளர் வேண்டுகோள்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் தலைமை செயலாளர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 Sept 2017 10:21 PM IST (Updated: 7 Sept 2017 10:21 PM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் eன தலைமை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்து இருந்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் அரசு சார்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இந்த விழாவிற்கு வரும் முதல்-அமைச்சர், ஜாக்டோ- ஜியோ அமைப்பு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று மதியம் 1.30 மணி அளவில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பி.இளங்கோ, ஜே.கணேசன் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது.

அதைத் தொடர்ந்து ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சர்வேயர் அரங்கத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற பி.இளங்கோ, ஜே.கணேசன் ஆகியோர் ‘போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்’ என்று கூறினார்கள். ஆனால் இவர்களுடைய கருத்துகளை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் இளங்கோ, கணேசனை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளாக சுப்பிரமணியன், மாயவன் ஆகியோரை நியமித்து கூட்டம் நடத்தினர். அதன்பின்னரே புதிய ஒருங்கிணைப்பாளர்கள், ‘திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்’ என்று அறிவித்தனர்.

அரசு ஊழியர் சங்கம் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், பட்டதாரி ஆசிரியர் கழகம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 17 சங்கங்கள் பங்கேற்றன.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கினர் .

இந்தநிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  கோரிக்கைகளை வலியுறுத்த வேறு வழிகளை கையாள நீதிமன்றம் கூறியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story