தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 8 Sept 2017 4:45 AM IST (Updated: 8 Sept 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பரவலாக தென்மேற்கு பருவமழை சில வாரங்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இன்னும் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ள காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரை இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 223 மில்லிமீட்டர். இயல்பைவிட அதிகமாக 323 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 45 சதவீதம் கூடுதலாகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை அளவு வருமாறு:-

ஆலங்குடி, ஆர்.கே. பேட்டை, செய்யாறு தலா 7 செ.மீ, காஞ்சீபுரம் 6 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், சின்னகல்லார், வேலூர், உத்திரமேரூர், சென்னை விமான நிலையம், வாணியம்பாடி, ஆரணி தலா 5 செ.மீ., போளூர் 4 செ.மீ., செங்கல்பட்டு, மணியாச்சி, ஆம்பூர், பள்ளிப்பட்டு, காரைக்குடி, கொளப்பாக்கம், பெரியகுளம், காவேரிபாக்கம், சோழவந்தான், மேலலாத்தூர், வால்பாறை, பாளையங்கோட்டை, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தலா 3 செ.மீ., சேரன்மகாதேவி, ஆலங்காயம், ஊத்தங்கரை, நாங்குநேரி, குடியாத்தம், திருமயம், உசிலம்பட்டி, பெரியகுளம், சாத்தனூர் அணைக்கட்டு, பூண்டி, மதுராந்தகம், அஞ்சட்டி, அரிமளம், இளையான்குடி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓரளவு மழை பதிவாகி உள்ளது.

Next Story