எடப்பாடி பழனிசாமியே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின்


எடப்பாடி பழனிசாமியே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 8 Sept 2017 3:15 AM IST (Updated: 8 Sept 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

மெஜாரிட்டியை இந்த ஆட்சி இழந்துவிட்டதால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க செப்டம்பர் 14-ந் தேதி வரை தடைவிதித்து நீதிமன்றம் உத்திரவிட்டுள்ள நிலையில், அதற்குள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வாய்ப்புள்ளதா?.

பதில்:- எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டு இருப்பது இந்த நாட்டுக்கே நன்றாகத் தெரியும். எனவே, குறுக்கு வழியில் திட்டங்களைத் தீட்டி, தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கு, பல முயற்சிகளை அவர்கள் எடுத்து வருகிறார்கள். அதில் ஒரு முயற்சிதான் உரிமைக்குழுவைக் கூட்டியது. உரிமைக்குழுவைக் கூட்டுவதற்கே இந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை இருந்தால் தான் உரிமைக்குழுவுக்கே பெருமை. எனவே, ஆட்சி நடத்தவும் பெரும்பான்மை இல்லாமல், உரிமைக்குழுவிலும் பெரும்பான்மை இல்லாமல் தான் அவர்கள் இருக்கிறார்கள்.

எனவே, அவர்கள் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதே தவறு என்பதால் நீதிமன்றத்தை அணுகினோம். ஜனநாயகத்தைக் காப்பாற்றும் வகையில் நீதிமன்றத்தின் தடை உத்தரவு வந்திருப்பதை உள்ளபடியே வரவேற்கிறோம். மகிழ்ச்சியடைகிறோம். எனவே, இதன் பிறகாவது மெஜாரிட்டியை இழந்துவிட்டுள்ள இந்த ஆட்சி, அவர்களாகவே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும்.

இல்லை என்றால், தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ், இந்த அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும் வகையில் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டுகின்ற முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் வாங்கியிருக்கிறார்களே?.

பதில்:- ஏற்கனவே 19 பேர் வாபஸ் பெற்றுவிட்டனர். இப்போது 3 பேர் வாபஸ் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆக மொத்தம் 22 பேர் வாபஸ் பெற்றுள்ளார்கள் என்று செய்திகள் மூலமாக அறிந்துகொண்டேன். அவர்கள் யார் யார், அவர்களுக்கு எவ்வளவு கொடுத்தார்கள், என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

கேள்வி:- நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் காலதாமதம் ஏற்படுவதால், இப்போது ஜக்கையன் எம்.எல்.ஏ. முதல்-அமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறாரே?.

பதில்:- அவர் இப்போது முதல்-அமைச்சருக்கு ஆதரவு தந்திருக்கிறார். மாலையில் அதை மாற்றிக்கொண்டு வாபஸ் பெறுவார். இதுபற்றி எல்லாம் யாரும் எதுவும் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story