சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்தது


சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்தது
x
தினத்தந்தி 8 Sept 2017 6:53 PM IST (Updated: 8 Sept 2017 6:53 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு காவல்துறை தடையை விதித்து உள்ளது.



சென்னை, 

மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 8-வது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் காலையில் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் வகுப்பிற்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னையில் உள்ள சில கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழக அரசு சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். போராட்டம் குறித்து தமிழக தலைமை செயலாளர், முதன்மை செயலாளர் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலியாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனையில் ஈடுபட்டார். நீட் தேர்வுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை எப்படி கையாள்வது என்பது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஆலோசனையில் ஈடுபட்டார். 

சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்து உள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Next Story