வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை உண்ணாவிரதம் கோர்ட்டு உத்தரவை அடுத்து உடனடியாக வாபஸ் பெற்றார்


வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை உண்ணாவிரதம் கோர்ட்டு உத்தரவை அடுத்து உடனடியாக வாபஸ் பெற்றார்
x
தினத்தந்தி 9 Sept 2017 3:00 AM IST (Updated: 9 Sept 2017 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு எதிராக வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

மயிலம்,

‘நீட்’ தேர்வுக்கு எதிராக வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். பின்னர் கோர்ட்டு உத்தரவை அடுத்து உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயகாந்தன். இவரது மனைவி சபரிமாலா (வயது 35). இவர் ஒலக்கூர் ஒன்றியம் வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றினார். அதே பள்ளியில் இவர்களது மகன் ஜெயசோழன் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

ஆசிரியை சபரிமாலா ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து கடந்த 6-ந்தேதி திடீரென தனது மகனுடன் பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், நேற்று முன்தினம் அவர் தனது வேலையை ராஜினாமா செய்வதாக கூறி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் அதற்கான கடிதத்தையும் கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டின் முன்பு சபரிமாலா உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது கையில் கோரிக்கை பதாகையும், மாணவி அனிதாவின் படங்களும் வைத்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சபரிமாலாவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

திண்டிவனம் சப்-கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் அதிகாரிகள் சபரிமாலாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாலையில் அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ‘நீட்’ தொடர்பாக யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே நீங்கள் போராட்டத்தை முடிக்காவிட்டால் கைது செய்வோம் என்று தெரிவித்தார். இதையடுத்து மாலை 4.50 மணிக்கு சபரிமாலா தனது போராட்டத்தை முடித்து கொண்டார்.

இதற்கிடையே சபரிமாலா வீட்டுக்கு வந்த தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

கல்வித்துறையில் உள்ள முரண்பாடுகளை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கல்வி பாடத்திட்டத்தின் கீழ் படிப்பதற்கான வகைப்பாடுகளை கொண்டு வர வேண்டும். இதற்கு அடித்தளமிட்டு இருக்கிறார்கள் மாணவி அனிதா, ஆசிரியை சபரிமாலா. அனிதா தன்னை மாய்த்துக்கொண்டு உயிர்த்தியாகம் செய்து செய்துள்ளார். அரசு ஆசிரியர் பணியை சபரிமாலா தியாகம் செய்து இருக்கிறார். ஆசிரியர் சமூகத்திற்கு ஒரு வழிகாட்டியாக இவர், இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story