மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள்- அரசியல் கட்சியினர் போராட்டம்


மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள்- அரசியல் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2017 2:45 AM IST (Updated: 9 Sept 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டு சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணலி அருகே உள்ள சேலவாயலில் திருத்தங்கல் நாடார் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள், கொடுங்கையூர் சின்னாண்டி மடம், கண்ணதாசன் நகர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த பல்லாவரம் வேல்ஸ் கல்லூரி மாணவர்கள், துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில், நாம் தமிழர் கட்சியின் எழும்பூர் தொகுதி செயலாளர் அய்யனார் மற்றும் வடசென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் புஷ்பராஜ் தலைமையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து செம்பியம் போலீசார், மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் சுமார் 20 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. கைதான அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நேற்று காலை 9 மணி முதல் 10 மணிவரை பள்ளியின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் வகுப்புக்கு சென்றனர்.

Next Story