திட்டமிட்டபடி 12-ந் தேதி பொதுக்குழு நடைபெறும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


திட்டமிட்டபடி 12-ந் தேதி பொதுக்குழு நடைபெறும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 10 Sept 2017 4:45 AM IST (Updated: 10 Sept 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

திட்டமிட்டபடி 12-ந் தேதி பொதுக்குழு நடைபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஆலந்தூர்,

திட்டமிட்டபடி 12-ந் தேதி பொதுக்குழு நடைபெறும். தினகரன் அணியில் உள்ள மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணிக்கு வருவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சரக்கு, சேவை வரி கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐதராபாத் சென்ற அமைச்சர் ஜெயக்குமார், முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். கட்சி விதிப்படி 5-ல் ஒரு பகுதி உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுக்குழுவை கூட்ட ஏற்பாடு செய்து உள்ளோம். அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி 12-ந் தேதி நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்வார்கள்.

பொதுக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினர்களின் பட்டியலை வெளியிட தயாராக இருக்கிறோம். எந்த விதியும் மீறப்படவில்லை. எம்.எல்.ஏ. ஜக்கையன் போல், தினகரன் அணியில் உள்ள மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணிக்கு வருவார்கள். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழ்நிலை வரும்போது நாங்கள் மெஜாரிட்டியை நிரூபிப்போம்.

அரசியல் நாகரிகம் தெரிந்தவர்கள் அரசியல் ரீதியாக கருத்து சொன்னால் அதற்கு பதில் அளிக்கலாம். சிலரது கேள்விக்கு நான் பதில் தருகிறேன். அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

என் கேள்விக்கு பதில் சொல்ல துணிவு இல்லாதவர்கள் என்னை பற்றி எது சொன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன். யார் கோமாளி என்று நாட்டு மக்களுக்கு தெரியும்.

பாரதீய ஜனதாவுடன் அ.தி.மு.க. தற்போது கூட்டணி இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது கட்சியில் முடிவு செய்யப்படும். தற்போது தேர்தல் எதுவும் இல்லை. இதனால் இப்போது அதுபற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை.

சரக்கு, சேவை வரி கூட்டத்தில் தமிழக வணிகர்களின் நலன் பற்றியும், வரி குறைப்பு பற்றியும் விவாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story