நதிகளை இணைக்க மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் ‘நதிகளை மீட்போம்’ விழாவில் பழனிசாமி வலியுறுத்தல்
நதிகளை இணைக்க மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் ‘என நதிகளை மீட்போம்’ விழிப்புணர்வு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘நதிகளை மீட்போம்’ விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
தேசிய நதிகளை மீட்டு, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய வேண்டும் என்ற நோக்கில் ‘நதிகளை மீட்போம்’ எனும் தலைப்பில் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கத்தை, ‘ஈஷா’ யோகா மையம் முன்னெடுத்தது. அதன்படி கடந்த 3-ந்தேதி கோவையில் இந்த விழிப்புணர்வு பேரணியை மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் தொடங்கிவைத்தார்.
‘ஈஷா’ யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நாடு முழுவதும் வாகன பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அவரே கார் ஓட்டி செல்கிறார். அவரோடு வழியில் பொதுமக்களும், பல தலைவர்களும், பிரபலங்களும் கலந்துகொள்கிறார்கள். 16 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த பயணம் அடுத்த (அக்டோபர்) மாதம் 2-ந்தேதி டெல்லியில் முடிவடைகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பேரணி, கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் முக்கியமான இடங்களுக்கு சென்ற இந்த விழிப்புணர்வு பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையை வந்தடைந்தது. இந்தநிலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 6 மணிக்கு விழா தொடங்கியது . இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
“நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்” விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய அளவில் நதிகளை இணைக்க மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. நதிகளை இணைக்க மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story