அண்ணா வழியில் மாநில சுயாட்சியைப் பாதுகாக்க தஞ்சை மாநாடு அடித்தளம் அமைக்கும் வைகோ அறிக்கை
அண்ணா வழியில் மாநில சுயாட்சியை பாதுகாக்க தஞ்சை மாநாடு அடித்தளம் அமைக்கும் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அண்ணாவின் 109–வது பிறந்தநாள் விழா மாநாடு வருகிற 15–ந் தேதி தஞ்சையில் நடைபெற இருக்கிறது. ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. நூற்றாண்டு கண்டு இருக்கிற திராவிட இயக்கம் எந்த சமூக நீதிக்காக உருவானதோ, அதன் லட்சியங்களுக்கு இன்று பெரும் சவால் எழுந்துள்ளது. இந்திய நாட்டிற்கே சமூக நீதிக் கோட்பாட்டிற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தது தமிழ்நாடு என்பது வரலாற்று உண்மையாகும்.
ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மற்றும் பழங்குடி பட்டியல் இன மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய இடத்தைப் பெறுவதற்கு வகுப்புரிமை ஆணையை செயல்படுத்தியது நீதிக்கட்சி ஆட்சி ஆகும். 1950–ல் பெரியாரும், அண்ணாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக சமூக நீதியைப் பாதுகாக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று போராடினார்கள்.
திராவிட இயக்கம் நடத்திய போராட்டம் தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவந்து சமூக நீதியைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டது. அதே நிலைமை இன்று மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வின் மூலம் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி மறுக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது.
நீட் நுழைவுத் தேர்வின் மூலம் மத்திய அரசு நமது மாணவர்களின் கல்வி உரிமையை பறித்தது மட்டுமல்ல, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மாநில உரிமைகளையும் நசுக்கி வருகிறது. அண்ணா வழியில் மாநில சுயாட்சியை பாதுகாக்க வலிமையான குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு தஞ்சை மாநாடு அடித்தளம் அமைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story