மத்திய தொழிற்பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை பெண்பார்த்துவிட்டு சென்றவர்


மத்திய தொழிற்பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை பெண்பார்த்துவிட்டு சென்றவர்
x
தினத்தந்தி 10 Sep 2017 9:30 PM GMT (Updated: 10 Sep 2017 7:06 PM GMT)

மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் மேற்குவங்கத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பேரணாம்பட்டு,

மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் மேற்குவங்கத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணத்திற்கு பெண் பார்த்து விட்டு சென்றவர் பிணமான சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த சேராந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. விவசாயி. இவரது மகன்கள் சபரிவாசன் (வயது 35), சதீஷ்குமார் (27). மேலும் அனுராதா, விஜயா, ரஜினி, ரூபலதா, சுஜாதா ஆகிய 5 மகள்களும் உள்ளனர். இவர்களில் சதீஷ்குமாரை தவிர மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

சதீஷ்குமார் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் பணிக்கு சேர்ந்தார். முதலில் அசாம் மாநிலத்தில் பணிபுரிந்த அவர் கடந்த 1½ வருடத்திற்கு முன்பு ஐகோர்ட்டு பாதுகாப்பு பணிக்காக சென்னைக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி சொந்த ஊரான சேராந்தாங்கல் கிராமத்திற்கு வந்திருந்தார்.

அப்போது அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக பெங்களூருவுக்கு சென்று பெண் பார்த்தனர். சதீஷ்குமாருக்கும் அந்த பெண்ணை பிடித்துவிட்டது. அதைத்தொடர்ந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சதீஷ்குமார் சென்னைக்கு சென்று பணியில் சேர்ந்தார்.

ஆனால் சில நாட்களிலேயே அவர் சென்னையில் இருந்து மேற்குவங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து அவர் 4 நாட்களுக்கு முன்பு மேற்குவங்கத்திற்கு சென்று பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்து, அதை அவருடைய பெற்றோருக்கும் தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார்கள்.

அதன்பேரில் பெற்றோருக்கு போலீசார் இந்த தகவலை தெரிவித்தனர். இதனை கேட்டு சதீஷ்குமாரின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். திருமணக்கோலத்தில் பார்க்க இருந்த மகனை பிணக்கோலத்தில் பார்க்க வேண்டியதாகிவிட்டதே என கதறினர். மேலும் சதீஷ்குமார் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழையில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலை செய்திருந்தால் மனஅழுத்தம் காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story