கள்ளக்காதல் தகராறில் கொலைவீட்டில் புதைக்கப்பட்ட பூ வியாபாரி உடல் தோண்டி எடுப்பு 2 பெண்கள் கைது


கள்ளக்காதல் தகராறில் கொலைவீட்டில் புதைக்கப்பட்ட பூ வியாபாரி உடல் தோண்டி எடுப்பு 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 11 Sept 2017 3:00 AM IST (Updated: 11 Sept 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டு வீட்டில் புதைக்கப்பட்ட பூ வியாபாரியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

ஆவடி,

ஆவடியில் கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டு வீட்டில் புதைக்கப்பட்ட பூ வியாபாரியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி காமராஜர் நகர், ராமலிங்கம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் என்ற சோமசுந்தரம் (வயது 38). இவர், ஆவடி ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு பூக்கடையில் வேலை செய்து வந்தார்.

கடந்த 2-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சுந்தரம் அதன் பிறகு மாயமானார். இது குறித்து அவருடைய தாயார் யசோதா (60) அளித்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

அப்போது ஆவடி கவுரிபேட்டை ஆதிகேசவ நாயுடு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் திவான் (32) என்பவரது வீட்டில் சுந்தரம் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் வீட்டின் உள்ளே புதைக்கப்பட்டு இருப்பது ஆவடி போலீசாருக்கு தெரிந்தது.

சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இன்னும் திருமணம் ஆகாத சுந்தரத்துக்கும், கவுரிபேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி (36) என்ற பூ வியாபாரிக்கும் கள்ளக்காதல் இருந்தது.

இதற்கிடையில் ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் (26) இறந்து விட்டதால் அவருடைய மனைவி அமுதாவுடனும் சுந்தரத்துக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் ராஜேஸ்வரியை அவர் தவிர்த்து விட்டார்.

ஆனால் அமுதா, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திவானுடன் நெருங்கி பழகி வந்தார். இதனால் அமுதாவுடன் சுந்தரம் தகராறு செய்து வந்தார். இதுபற்றி ராஜேஸ்வரியிடம் அமுதா கூறினார்.

சம்பவத்தன்று இரவு ராஜேஸ்வரி, பூ கடையில் இருந்த சுந்தரத்தை அமுதா வீட்டுக்கு போகலாம் என்று கூறி திவான் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த அமுதாவும், ராஜேஸ்வரியும் வெளியே சென்று விட்டனர். வீட்டில் இருந்த தனது தாய் ரகிமாகனியை (48) உறவினர் வீட்டுக்கு திவான் அனுப்பி விட்டார்.

பின்னர் திவான், அவருடைய நண்பரான ஆட்டோ டிரைவர் கோபி இருவரும் சேர்ந்து சுந்தரத்தை கத்தியால் மார்பு பகுதியில் சுமார் 8 இடங்களில் சரமாரியாக குத்திக்கொலை செய்தனர். பின்னர் வீட்டுக்குள் 6 அடி நீளம், 3 அடி அகலத்துக்கு 4 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி அதில் சுந்தரத்தின் உடலை போட்டு புதைத்து விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க அதன் மீது சிமெண்டு கலவை போட்டு பூசி விட்டனர்.

அதன்பிறகு திவானும், கோபியும் தலைமறைவாகி விட்டனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மாயமான சுந்தரத்தை போலீசார் தேடுவதை அறிந்த திவானின் தாய் ரகிமாகனி, தனது வீட்டில் சிமெண்டு கலவை பூசி இருப்பதால் சந்தேகம் இருப்பதாக ஆவடி போலீசாரிடம் கூறியதாலேயே இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் சர்வேஸ்ராஜ் உத்தரவின் பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நேற்று மதியம் 12 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மணிகண்டன், சுரேஷ், சமீர் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

ஆவடி தாசில்தார் பாபு, போலீஸ் உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வீட்டுக்குள் புதைக்கப்பட்டு இருந்த சுந்தரத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

2 பெண்கள் கைது

டாக்டர்கள் குழுவினர் அங்கேயே சுந்தரத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேஸ்வரி, அமுதா இருவரையும் கைது செய்தனர். 2 பேரையும் நேற்று மாலை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திவானுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு ராதா (30) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திவானின் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த 6 ஆண்டுகளாக அவரை விட்டு ராதா பிரிந்து வாழ்கிறார். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

தலைமறைவாக உள்ள திவான், கோபி இருவரையும் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story