தடையை மீறி போராடுபவர்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடரலாம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தடையை மீறி போராடுபவர்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடரலாம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Sept 2017 12:39 PM IST (Updated: 11 Sept 2017 12:38 PM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


மதுரை, 


பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்ட குழுவான ஜாக்டோ-ஜியோவை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஈரோட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்ட குழுவில் விரிசல் ஏற்பட்டது. ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள சில சங்கங்கள் போராட்டத்தை தள்ளிவைக்கலாம் என்று கருத்து தெரிவித்தன. சில அமைப்புகள் திட்ட மிட்டபடி வேலைநிறுத்தம் என்று அறிவித்தன.

இதன்படி 7-ம் நிறுத்தம் தொடங்கியது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. சில இடங்களில் பாதிப்பு இல்லை. இதற்கிடையே இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று மதுரையை சேர்ந்த சேகரன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், அரசு ஊழியர்களுக்கு அரசு ஏற்கனவே போதுமான அளவு ஊதியம் வழங்கி வருகிறது. அரசின் மொத்த வருவாயையும் சம்பளம் வழங்குவதற்கு மட்டும் பயன்படுத்த முடியாது. வேலை நிறுத்தம் அடிப்படை உரிமை அல்ல. மேலும் வேலை நிறுத்தம் செய்வது அரசு ஊழியர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.

வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசு பள்ளிகளில் 10, 11, 12 பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். அரசு அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் காலவரம்பற்ற வேலை நிறுத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.  

மேலும் இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்ப்பபள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று மனுதாரர் தரப்பு வக்கீல் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.


Next Story