மாநில செய்திகள்

கட்சியில் இருந்து சசிகலா, தினகரன் நீக்கப்படுவார்களா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி + "||" + Interview with Minister Jayakumar

கட்சியில் இருந்து சசிகலா, தினகரன் நீக்கப்படுவார்களா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கட்சியில் இருந்து சசிகலா, தினகரன் நீக்கப்படுவார்களா?
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
கட்சியில் இருந்து சசிகலா, தினகரன் நீக்கப்படுவார்களா? என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.
சென்னை,

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.(அம்மா, புரட்சி தலைவி அம்மா) பொதுக்குழு கூட்டத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் காலை 10.35 மணிக்கு பொதுக்குழு கூட்டம் கூடுகிறது.

இதையொட்டி, கூட்டம் நடைபெறும் பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதும் திருப்பிய திசை எல்லாம் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்பட அமைச்சர்களும், டாக்டர் மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, நந்தம் விசுவநாதன் உள்பட நிர்வாகிகளும் நேற்று பார்வையிட்டனர்.

கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் 1 மணி நேரம் ஆலோசனையிலும் அவர்கள் ஈடுபட்டனர். பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றைய தினமே சென்னை வந்துவிட்டனர். 

பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஜனநாயக ரீதியாக அ.தி.மு.க. இயக்கத்தை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுச்சிமிகு இயக்கமாக மாற்றினார். ஜெயலலிதாவின் வழியில் நாங்கள் இன்றைக்கு இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எனவே பொதுக்குழு என்பது திட்டமிட்டபடி, சட்ட விதிகளுக்கு உட்பட்டு கூட்டப்படுகிறது. எழுச்சியான முறையில் கூட்டம் நடைபெறும்.

பொதுக்குழுவில் 100 சதவீதம் அளவுக்கு உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்று முழு நம்பிக்கை இருக்கிறது. பொது க்குழுவுக்கு யார் வரவில்லையோ, அது குறித்து தலைமை நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பார்கள்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியில் இருந்து சசிகலா, டி.டி.வி.தினகரனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படுமா? என்ற கேள்விக்கு நாளை(இன்று) விடை கிடைக்கும். 

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.