மாநில செய்திகள்

அரசு ஊழியர் விடுமுறை எடுக்க தடை தமிழக அரசு உத்தரவு + "||" + Government employee is forbidden to vacation Tamil Nadu Government Order

அரசு ஊழியர் விடுமுறை எடுக்க தடை தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர் விடுமுறை எடுக்க தடை
தமிழக அரசு உத்தரவு
ஜாக்டோ– ஜியோ போராட்டத்தை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
சென்னை, 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 7–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டத்தை நிறுத்திவிட்டு பணிக்கு செல்ல வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது. 

அதன்பேரில் அனைவரும் பணிக்கு திரும்பும்படி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கோரிக்கை விடுத்தார்.

வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் யார்–யார்? என்பது பற்றி துறைத் தலைவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா உத்தரவிட்டார்.

இதற்கிடையே கோர்ட்டு உத்தரவையும் மீறி போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக தமிழக அரசு ‘போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் வேலை செய்யாத நாளுக்கான சம்பளத்தை நிறுத்துவது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இடைக்கால நீக்கம் செய்வது, விடுமுறை எடுக்க தடை விதிப்பது’ போன்ற நடவடிக்கைகளை கூறி எச்சரித்து வருகிறது.

இந்த நிலையில், அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா அனுப்பியுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கடந்த அரசு கடிதத்தில், அரசு ஊழியர்கள் சமர்ப்பிக்கும் சாதாரண விடுப்பு, ஒட்டுமொத்தமாக எடுக்கும் சாதாரண விடுப்பு ஆகியவற்றை அனுமதிக்கக்கூடாது. அவர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அதை அங்கீகாரமற்ற விடுப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக, மருத்துவ விடுப்பு தவிர சாதாரண விடுப்பு, ஒட்டுமொத்த சாதாரண விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஆகிய எதையும் அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிடப்படுகிறது.

மருத்துவ விடுப்பை அளிப்பதற்கு முன்பதாக, விடுப்பு கேட்டவரை மருத்துவ குழுவுக்கு அனுப்பி, அவரிடம் இருந்து உடல்நிலை குறித்த சான்றிதழை வாங்கி பரிசீலிக்க வேண்டும். 

உடல்நிலை பற்றிய உண்மை தெரியாமல் மருத்துவ விடுப்பை வழங்கக்கூடாது. கொடுக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ், உண்மையிலேயே மருத்துவ காரணங்களுக்காக பெறப்படவில்லை என்று கண்டறியப்பட்டால் அந்த அரசு ஊழியரை தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மேலும், மருத்துவ விடுப்பு கேட்டுள்ள நிலையில் அவர்களின் உடல்நிலை குறித்த உண்மை நிலையை கண்டறியும் வரை அந்த மருத்துவ விடுப்பு காலகட்டத்துக்கான சம்பளத்தை வழங்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.