‘ஜாக்டோ–ஜியோ’ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


‘ஜாக்டோ–ஜியோ’ அமைப்பு சார்பில் அரசு  ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2017 11:30 PM GMT (Updated: 11 Sep 2017 7:12 PM GMT)

‘ஜாக்டோ–ஜியோ’ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை,

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7–வது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஜாக்டோ–ஜியோ’ அமைப்பு சார்பில் கடந்த 7–ந்தேதி முதல் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். 

போராட்டத்தின் ஒருகட்டமாக  சென்னை எழிலக வளாகத்தில் ‘ஜாக்டோ–ஜியோ’ அமைப்பு சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் என 300–க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மாயவன் பேசியதாவது:–

நியாயமான எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை. இதுவரை நடைமுறையில் இருந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றிய தமிழக அரசை கேள்விகேட்க முடியாமல், எங்கள் போராட்டங்களுக்கு தடை போடும் ஐகோர்ட்டின் தீர்ப்பை ஏற்கமுடியாது. இந்த தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

தமிழக அரசு மோடியை நம்பி ஆட்சி நடத்தி வருகிறது. தொழிலாளர்களை நம்பி ஆட்சி நடத்தினால், அரசு உண்மையிலேயே நன்றாக இருக்கும். தற்போது வரை எங்களுக்கு அரசிடம் இருந்து எந்த விளக்க கடிதமும் வரவில்லை. எதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். 

‘எஸ்மா’, ‘டெஸ்மா’ போன்றவற்றை கடந்து நாங்கள் தொடர்ந்து பணியில் நீடிக்கிறோம், பெரும்பாலானோர் பதவி உயர்வும் பெற்றிருக்கிறோம். ஆனால் இச்சட்டங்களை போட்டவர்கள் அடுத்த ஆட்சியிலேயே காணாமல் போனார்கள். அதையெல்லாம் ஆட்சியாளர்கள் மறந்துவிட கூடாது. 

அடுத்தகட்டமாக நாங்கள் நாளை (இன்று) மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.  

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story