அடக்குமுறை மூலம் பணிய வைக்க அரசு நினைத்தால் தோல்வியே மிஞ்சும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அடக்குமுறை மூலம் பணிய வைக்க அரசு நினைத்தால் தோல்வியே மிஞ்சும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலை நிறுத்த அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்தி பணிய வைக்கும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. அரசு ஊழியர்கள் பல மாதங்களுக்கு முன்பே வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிட்டுவிட்ட நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்தி, போராட்டத்தை அரசு தவிர்த்திருக்க வேண்டும்.
ஆனால், போராட்டம் தொடங்குவதற்கு முதல் வாரம் அமைச்சர்கள் குழுவும், முதல் நாளில் முதல்- அமைச்சரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுகளில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதை விட, அவர்கள் அச்சுறுத்தப்பட்டது தான் அதிகமாகும். அதுமட்டுமின்றி, அரசு ஊழியர் கூட்டமைப்பை உடைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளில் முதல்- அமைச்சர் ஈடுபட்டார்.
அரசுக்கு தோல்வியே நேரிடும்
அடுத்தகட்டமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளக்கூடாது? என்று விளக்கம் கேட்டு 85 ஆயிரம் ஊழியர்களுக்கு அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அரசு அச்சுறுத்தியுள்ளது. இத்தகைய அடக்குமுறைகள் மூலம் பணிய வைத்து விடலாம் என்று அரசு நினைத்தால் தோல்வியையே எதிர்கொள்ள நேரிடும்.
2003-ம் ஆண்டில் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்ட முதல்-அமைச்சர் இறுதியில் தோல்வியடைந்ததை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். எனவே, இத்தகைய அடக்குமுறைகளை கைவிட்டு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story