முதல்-அமைச்சரை மாற்ற முடியவில்லை என்றால் ஆட்சியை மாற்றுவோம் டி.டி.வி.தினகரன் பேட்டி


முதல்-அமைச்சரை மாற்ற முடியவில்லை என்றால் ஆட்சியை மாற்றுவோம் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 11 Sep 2017 11:45 PM GMT (Updated: 11 Sep 2017 8:07 PM GMT)

முதல்-அமைச்சரை மாற்ற முடியவில்லை என்றால் ஆட்சியை மாற்றுவோம் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

மதுரை,

அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எங்கள் கோரிக்கை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றவேண்டும் என்பது தான். அப்படி மாற்றாவிட்டால் இந்த ஆட்சி நிலைக்காது. முதல்வரை மாற்ற முயற்சி செய்வோம். அப்படி இல்லை என்றால் ஆட்சியையே மாற்றுவோம். மக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது. அவர்களின் ஆதரவோடு மீண்டும் நாங்கள் ஆட்சியை அமைப்போம். எங்களுக்கு எதிரி தி.மு.க. தான்.

தர்ம யுத்தம் என்று சொன்னவர் (ஓ.பி.எஸ்) இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்? அவருக்கு ஒரே ஆசை பதவி மட்டுமே.

பொதுக்குழுவுக்கு தடைவிதிப்பதாக பெங்களூரு சிட்டிசிவில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்புக்குரியது. எங்கள் கட்சி அகில இந்திய கட்சி. ஆகவே எங்கு தீர்ப்பளித்தாலும் அது செல்லும்.

நாங்கள் துரோகிகள் அல்ல. அம்மாவின் கட்சியை அழிக்க நினைக்கும் அமைச்சர்களே துரோகிகள்.

நாங்கள் கட்சியை காப்பாற்ற உள்ளோம். தீர்ப்பையும் மீறி பொதுக்குழு நடத்துவார்கள் என்று சொன்னால் நடத்திப்பார்க்கட்டும். அதற்கு பிறகு எங்கள் அடுத்த நடவடிக்கை பயங்கரமானதாக இருக்கும். நாளை இந்த நடவடிக்கையை நீங்களே பார்ப்பீர்கள்.

தற்போது நடைபெறும் ஆட்சி பதவி ஆசை பிடித்த எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியாக உள்ளது. இவர்களுக்கு பின்னால் மத்திய அரசு செயல்படுகிறதா என தெரியவில்லை. ஆனால் இவர்கள் சரியில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story