நம்பிக்கையில்லா தீர்மானம் : எச்.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் பதில்


நம்பிக்கையில்லா தீர்மானம் :  எச்.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 12 Sept 2017 3:15 AM IST (Updated: 12 Sept 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்றத்தை கூட்டினால் தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும் என்றும், கவர்னரிடம் தான் கூட்டும் அதிகாரம் உள்ளது என்றும் எச்.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

ஒரு வார காலம் அவகாசம்

கேள்வி:- ஆளும் கட்சியான அ.தி.மு.க.வினர் தொகுதிகளுக்குச் செல்லாமல் கூவத்தூர், கர்நாடகாவில் என்று பல இடங்களில் தங்கி இருக்கிறார்களே?.

பதில்:- அதனால் தான் கவர்னரை நேரில் சந்தித்து, மெஜாரிட்டியை இழந்துள்ள ஒரு அரசு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடப்பதால் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. எனவே, சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டு வந்திருக்கிறோம். அதை செய்ய வேண்டியது கவர்னரின் கடமை. அதில் இருந்து அவர் தவறினால் நீதிமன்றத்தினை நாட வேண்டிய சூழல் ஏற்படும், எனவே, ஒரு வாரகால அவகாசமும் தந்துவிட்டு வந்திருக்கிறோம்.

மதவாதக் கொள்கை

கேள்வி:- ‘நீட்’ தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் போராடிக் கொண்டிருந்தாலும் மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?.

பதில்:- இந்தக் கேள்வியை மத்திய மந்திரிகளிடமும், தமிழக முதல்-அமைச்சரிடமும் கேட்க வேண்டும்.

கேள்வி:- தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு இருக்கிறதே?.

பதில்:- மத்திய அரசைப் பொறுத்தவரையில், மதவாதத்தை அடிப்படையாக வைத்து, அந்தக் கொள்கைகள், லட்சியங்களின் அடிப்படையில் செயல்படுகிறார்கள். அதனை நாங்கள் கண்டித்து, தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

சிந்தனை அறிவு இல்லை

கேள்வி:- சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க. ஏன் தயங்குகிறது என்று எச்.ராஜா கேட்டு இருக்கிறாரே?.

பதில்:- சட்டமன்றத்தை நாங்கள் கூட்ட முடியாது. சட்டமன்றத்தைக் கூட்டினால் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர முடியும். இந்த சிந்தனை, அறிவு கூட அவர்களுக்கு இல்லையே என்பது தான் எனது வருத்தமாக இருக்கிறது. சட்டமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் கவர்னரிடம் இருக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கு மெஜாரிட்டி இருப்பதாக நினைத்தால், அதை நிரூபிக்க சட்டமன்றத்தைக் கூட்டுமாறு கவர்னரிடம் பரிந்துரை செய்ய வேண்டும். அல்லது அ.தி.மு.க. ஆட்சிக்கு சப்பைக்கட்டும் பா.ஜ.க.வினர் சென்று கவர்னரிடத்தில் பரிந்துரை செய்ய வேண்டும். அதையெல்லாம் செய்யாமல் விட்டு விட்டு, எங்கள் மீது குறை சொல்வதெல்லாம் திசை திருப்பும் வேலை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். 

Next Story