குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கக்கோரி யாத்திரை


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கக்கோரி யாத்திரை
x
தினத்தந்தி 11 Sep 2017 8:48 PM GMT (Updated: 11 Sep 2017 8:48 PM GMT)

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கக்கோரி கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு விழிப்புணர்வு யாத்திரை தொடங்கினார்.

கன்னியாகுமரி, 

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான கைலாஷ் சத்யார்த்தி, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், கடத்தல் போன்றவற்றை தடுக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கன்னியாகுமரி முதல் டெல்லி வரை வாகன யாத்திரை மேற்கொள்கிறார்.

இந்த யாத்திரை தொடக்க விழா நேற்று காலை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நடந்தது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் விவேகானந்தர் உரையாற்றிய தினமான நேற்று இந்த யாத்திரை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் யாத்திரையை தொடங்கிவைத்து வாழ்த்தி பேசினார். அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி படகு துறையில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேரணியாக வந்தனர். பேரணி முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும் கைலாஷ் சத்யார்த்தியை பாராட்டுகிறேன். சமூகத்தில் மனித மிருகங்களாக வாழ்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே குழந்தைகளை துணிச்சல் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும்.

கைலாஷ் சத்யார்த்தி இந்த பயணத்தின் மூலம் நாடு முழுவதும் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, 22 மாநிலங்களில் குழந்தைகளை சந்திக்க இருக்கிறார். அடுத்த மாதம் 16-ந் தேதி ஜனாதிபதி மாளிகையில் இந்த யாத்திரை நிறைவு பெறுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

1 லட்சம் குழந்தைகள்

கைலாஷ் சத்யார்த்தி கூறும்போது, “நாட்டில் ஆண்டுதோறும் 1 லட்சம் குழந்தைகள் மாயமாகிறார்கள். 6 நிமிடத்திற்கு ஒரு குழந்தை மாயமாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாகும். எனவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது அனைவரின் கடமை. குழந்தைகளின் உரிமைகளை காக்கவும், பாதுகாப்பான இந்தியாவை உருவாக்கவும் இந்த நெடும்பயணம் உதவி செய்யும். நான் ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து 2 முறை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளேன். இது 3-வது பயணம்” என்றார். 

Next Story