ஓராயிரம் தினகரன் வந்தாலும் கட்சியை அசைக்க முடியாது - பொதுக்குழுவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு


ஓராயிரம் தினகரன் வந்தாலும் கட்சியை அசைக்க முடியாது - பொதுக்குழுவில் முதலமைச்சர் பழனிசாமி  பேச்சு
x
தினத்தந்தி 12 Sept 2017 1:07 PM IST (Updated: 12 Sept 2017 1:07 PM IST)
t-max-icont-min-icon

ஒரு தினகரன் அல்ல ஓராயிரம் தினகரன் வந்தாலும் கட்சியை அசைக்க முடியாது என பொதுக்குழுவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

சென்னை

பொதுக்குழு கூட்டத்தில்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஜெயலலிதா இல்லாத நிலையில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் தடைவிதிக்காதது நமக்கு கிடைத்த முதல் வெற்றி.

கட்சியில் உறுப்பினராக இல்லாத டிடிவி தினகரன் மற்றவர்களை எப்படி நீக்க முடியும்.  கடந்த 10 ஆண்டுகளாக டிடிவி தினகரன் எங்கே இருந்தார், துரோகம்  இழைத்ததற்காக  ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கபட்டவர் எங்களை பார்த்து துரோகிகள் என்பதா . ஓராயிரம் தினகரன் வந்தாலும்  யார் நினைத்தாலும் நம்மை அழிக்க முடியாது. பிரிந்த இயக்கம் ஒன்றிணைந்தது  இல்லை நாம் ஒன்றிணைந்து இருக்கிறோம்.

இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்தி விடலாம் என்று சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால் நீதிமன்றம் இந்த தடையை அகற்றியுள்ளது. இதனால் கோர்ட்டு மூலம் நமக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஜெயலலிதா இல்லாத நிலையில் நாம் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளோம். எனவே நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

சிலர் நம்மை அழித்து விடலாம், விரட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள். யார் நினைத்தாலும் நம்மை அழிக்க முடியாது. அரசியல் வரலாற்றில் பிரிந்த இயக்கங்கள் ஒன்று சேர்ந்ததாக வரலாறு இல்லை. ஆனால் நாம் ஒன்று சேர்ந்து இருக்கிறோம்.

ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை. ஆனால் அ.தி.மு.க. மட்டும்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து இந்த சாதனையை படைத்துள்ளது.  ஒரு தினகரன் அல்ல ஓராயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத தினகரன் மற்றவர்களை எப்படி நீக்க முடியும்.

கடந்த 10 ஆண்டுகளாக தினகரன் எங்கே சென்றார்.  துரோகம் இழைத்ததால் ஜெயலலிதாவால் நீக்கப் பட்டவர் தினகரன். அவர் எங்களை பார்த்து துரோகி என்கிறார். எனவே யார் நினைத்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Next Story