‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2017 2:15 AM IST (Updated: 13 Sept 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

பா.ம.க. சார்பில், நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு கோரி பா.ம.க. சார்பில், நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாட்டிற்கு ‘நீட்’ தேர்வு என்பது தேவையற்றது. அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் ‘நீட்’ தேர்வுக்கு சாவு மணி அடித்துள்ளது. இந்த ‘நீட்’ தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் ஆகும்.

தற்போது இந்தியாவில் 25 வகையான பாடத்திட்டங்கள் உள்ளது. ஆனால் ‘நீட்’ தேர்வு என்பது மத்திய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் நடத்தப்படுகிறது. இதனால் மற்ற பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story