ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் எனது குரலை ஒடுக்க முடியாது -ப.சிதம்பரம்
“அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் எனது குரலை ஒடுக்க முடியாது”, என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை,
ப.சிதம்பரம், மத்திய நிதி மந்திரியாக இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கிடைத்த முதலீட்டு தொகையை, குறைத்து காட்டுவதற்காக உதவி செய்ததாகவும், அதற்கு ஆதாயம் பெற்றதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. சோதனையையும் மேற்கொண்டது.
கார்த்தி சிதம்பரம் மீது, சட்ட விரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு கணக்கில் காட்டப்படாத சொத்துகள் எதுவும் வெளிநாடுகளில் இல்லை என்றும், இந்த குற்றச்சாட்டால் குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளதாகவும், சி.பி.ஐ. விரும்பினால் எப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம்’, என்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக முன்னாள் மத்திய நிதி மந்திரியும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒடுக்க முடியாது
எங்களிடம் கணக்கில் காட்டப்படாத சொத்துகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, எந்தவொரு ஆவணத்தையும் வெளிக்காட்டுவதோடு, அவற்றை அரசுக்கு மாற்றவும் எனது குடும்பத்தினர் தயாராக உள்ளனர்.
மோசமான மற்றும் ஆதாரமில்லாத இக்குற்றச்சாட்டு எனது குரலை ஒடுக்குவதற்காக கூறப்படுகிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story