தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தில் நேற்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ என்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை கைவிட சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டது. அந்த உத்தரவை மீறி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும் அவர்கள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விடுமுறையில் கட்டுப்பாடு
ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசு விதிப்படி, வேலை செய்யாத நாளுக்கான சம்பளத்தை நிறுத்துவது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இடைநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை கூறி எச்சரித்து வருகிறது.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்னா, “மருத்துவ விடுப்பு தவிர சாதாரண விடுப்பு, ஒட்டுமொத்த சாதாரண விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஆகிய எதையும் அனுமதிக்கக்கூடாது. மருத்துவ விடுப்பு அளிப்பதற்கு முன்பாக மருத்துவ குழுவின் சான்றிதழை வாங்கி பரிசீலிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவ சான்றிதழ் உண்மையிலேயே மருத்துவ காரணங்களுக்காக பெறப்படவில்லை என்று கண்டறிந்தால், அந்த அரசு ஊழியர் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். உண்மை நிலையை கண்டறியும் வரை அந்த மருத்துவ விடுப்பு காலகட்டத்துக்கான சம்பளத்தை வழங்கக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளார்.
1.18 லட்சம் பேர் பங்கேற்பு
நேற்று நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 53 ஆயிரம் ஆசிரியர்கள், 65 ஆயிரம் அரசு ஊழியர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி கேட்டபோது அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஐகோர்ட்டு உத்தரவு, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளரின் அரசாணை ஆகியவற்றுக்கு பிறகு போராடும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழ்நாடு அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டம் (டெஸ்மா), அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டம் (எஸ்மா) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுப்பது பற்றி தலைமை செயலாளர் மற்றும் உள்துறை தான் முடிவு செய்யவேண்டும்.
தற்போது ஜாக்டோ-ஜியோ தனது போராட்ட நிலையை மாற்றியுள்ளது. அதன்படி, மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்திலும், சென்னையில் எழிலகத்திலும் காத்திருப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாக தெரிகிறது. அவர்களுக்கு சாதகமாக அரசு உத்தரவு பிறப்பிக்கும்வரை காத்திருப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story