புதிய வாகனங்களை பதிவு செய்ய ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு இடைக்கால தடை


புதிய வாகனங்களை பதிவு செய்ய ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு இடைக்கால தடை
x
தினத்தந்தி 13 Sept 2017 3:00 AM IST (Updated: 13 Sept 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

புதிய வாகனங்களை பதிவு செய்ய ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்ற சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

புதிதாக வாகனங்கள் வாங்குபவர்கள் அந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட வாகன விற்பனை நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கடந்த மாதம் 24-ந் தேதி தமிழக போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த சுற்றறிக்கையை எதிர்த்து புதுடெல்லியை சேர்ந்த வாகன விற்பனை முகவர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நடைமுறைக்கு சாத்தியமில்லை

அந்த மனுவில், ‘சிறுவர்கள் பெயரிலும், மாற்றுத்திறனாளிகள் பெயரிலும், அறக்கட்டளை பெயரிலும் வாகனங்கள் வாங்கப்படுகின்றன. ஆனால், அவர்கள் வாகனங்களை இயக்குவது கிடையாது.

புதிதாக வாகனம் வாங்குபவர்கள் அனைவரும் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை. இந்த சுற்றறிக்கையால் டிரைவராக பணியாற்றி வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இடைக்கால தடை

இந்த மனு நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த மனுவுக்கு 4 வாரத்தில் போக்குவரத்து ஆணையர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். 

Next Story