ஆட்சியை அகற்றும் வேலையை தொடங்கி விட்டேன் -டி.டி.வி.தினகரன் பேட்டி


ஆட்சியை அகற்றும் வேலையை தொடங்கி விட்டேன் -டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 12 Sep 2017 11:45 PM GMT (Updated: 12 Sep 2017 9:05 PM GMT)

கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கலைக்கும் வேலையை தொடங்கி விட்டேன் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

மதுரை,

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் எடப்பாடி அணியினர் நேற்று நடத்தியது பொதுக்கூட்டம் தான். பொதுக்குழு கூட்டமே அல்ல. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு மட்டுமே உண்டு.

சசிகலாவை இவர்கள் தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்தார்கள். அதன் பிறகு அவர் சிறைக்கு சென்றதும் ஒரு மாதம் கூட பொறுக்காமல் இவர்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தார்கள்.

ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க முடியவில்லை என்று கூறும் இவர்கள் இன்று முன்வரிசையில் அவர் இருந்த இடத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்து இருக்கிறார்கள். இப்போது நடப்பது அம்மா ஆட்சி அல்ல. பழனிசாமி அண்ட் கம்பெனி ஆட்சி தான்.

துரோகமும் துரோகமும் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. இவர்கள் போடும் தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்பதை ஐகோர்ட்டு தான் முடிவு செய்யும்.

நாங்கள் அம்மாவின் வழியில் செயல்படுகிறோம். எங்களால் அம்மா இருந்த இடத்தில் ஓ.பி.எஸ்.சையும், இ.பி.எஸ்.சையும் வைத்துப்பார்க்க முடியவில்லை.

கழகத்தையும் அதன் 1½ கோடி தொண்டர்களையும் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள், “இந்த ஆட்சியை அகற்றுங்கள். அம்மா ஆட்சியை கொண்டு வாருங்கள்” என்று தான் கூறுகிறார்கள்.

எனக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. எனவே தற்போதைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை. இந்த ஆட்சியை அகற்றுவதற்கான வேலையை தொடங்கி விட்டேன். இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது.

அடுத்து, தேர்தலில் போட்டியிட்டால் அமைச்சர்கள் கூட டெபாசிட்டை இழப்பார்கள். கட்சி எங்களிடம் இருக்கிறது என்கிறார்கள். அப்படியானால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தியுங்கள் பார்ப்போம்.

நீங்களும் வேட்பாளர்களை நிறுத்துங்கள், நாங்களும் வேட்பாளர்களை நிறுத்துகிறோம். யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை பார்த்து விடலாம்.

மெஜாரிட்டி இழந்த அரசு மீது நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு உரிமை உள்ளது. சட்டசபையை கூட்ட சபாநாயகருக்கு அவர் உத்தரவிடலாம். பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கும் உத்தரவிடலாம். ஆனால் கவர்னரிடம் இருந்து இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் கவர்னர் பதவி மீது இருந்த நம்பிக்கை கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது.

3 வார காலம் பொறுமையாக காத்து இருந்தோம். இனி இந்த ஆட்சி தொடரக்கூடாது. இதற்கு கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன் என்ற ஒரே காரணத்தால் தான் ஆட்சி தொடரக்கூடாது என்று கூறுகிறேன்.

பொதுக்குழுவை கூட்டவே அதிகாரம் இல்லை. அப்படி இருக்கும் போது கட்சியில் இருந்து யாரையும் நீக்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை.

இன்னும் 2 நாட்கள் பொறுத்து இருப்போம். கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்.

இனி இந்த ஆட்சி நீடித்தால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். எனவே இந்த ஆட்சியை அகற்றும் வேலையை தொடங்கி விட்டேன்.

இவ்வாறு தினகரன் கூறினார். 

Next Story