மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை


மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Sep 2017 8:45 PM GMT (Updated: 13 Sep 2017 8:08 PM GMT)

மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துடியலூர், 

கோவை துடியலூரை அடுத்த குருடம்பாளையம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையம் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து சி.ஆர்.பி.எப். படைப்பிரிவில் பல்வேறு பணிகளுக்கு தேர்தெடுக்கப்படும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு துப்பாக்கி சுடுதல், தற்காப்பு பயிற்சி, போர்க்கால பயிற்சி, பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு அரியானா மாநிலம் ரிவாரி மாவட்டம் பத்ரானா பகுதியை சேர்ந்த சந்தீப் (வயது 25) என்பவர் கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி மையத்தில் உள்ள அறையில் தங்கி இருந்து 32 பட்டாலியன் படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டருக்காக பயிற்சி பெற்று வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று காலை பயிற்சி மைய வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் சந்தீப் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த உயர் அதிகாரிகளும், துடியலூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்தீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் சந்தீப் என்ஜினீயரிங் படித்துள்ளார் என்பதும், அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் அவரது அறையில் சோதனையிட்ட போது அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதம் இந்தியில் எழுதப்பட்டு இருந்தது.

கண்பார்வை குறைபாடு

அந்த கடிதத்தில், நான் கஷ்டப்பட்டு படித்துதான் இந்த வேலைக்கு தேர்வாகி வந்தேன். ஆனால் நான் தற்போது உடல் தகுதியை இழந்து விட்டேன். பயிற்சியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னால் முழுமையாக பயிற்சியில் ஈடுபட முடியவில்லை.

மேலும் எனக்கு கண்பார்வையும் குறைந்து கொண்டே வருகிறது. எனக்கு வீட்டில் எந்த வித பிரச்சினையும் கிடையாது. கண்பார்வை குறைபாட்டால் என்னால் படிக்க முடியவில்லை. எனவே தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன் என எழுதப்பட்டு இருந்தது.

தொடர்ந்து போலீசார் சந்தீப் உன்மையிலேயே கண் குறைபாட்டால்தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story