16-ந்தேதி திண்டுக்கல்லில் தி.மு.க. முப்பெரும் விழா மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


16-ந்தேதி திண்டுக்கல்லில் தி.மு.க. முப்பெரும் விழா மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Sept 2017 3:30 AM IST (Updated: 14 Sept 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

16-ந்தேதி திண்டுக்கல்லில் தி.மு.க. முப்பெரும் விழா நடத்தப்பட இருப்பதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முப்பெரும் விழா

செப்டம்பர் 15-ந்தேதி (நாளை) நம்மை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாள். அதே 17-ந்தேதி தான் இந்த மண்ணின் உரிமைகளை மீட்கும் அரசியல் பேரியக்கமான தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

செப்டம்பர் 15-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவதுடன், 16-ந்தேதி திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலை, அண்ணா திடலில் நடைபெறும் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, 17-ந்தேதி சென்னை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்விலும் பங்கேற்கிறேன்.

விருதுகள்

உயிரனைய இயக்கம் காக்கும் பணியை மேற்கொண்டு இலட்சிய நடைபோடும் தீரர்களுக்கு ஆண்டுதோறும் முப்பெரும் விழாவில் கழகத்தின் சார்பில் விருதுகள் வழங்கி அவர்களின் செயலைப் போற்றி, அத்தகையப் பணியை இளைய தலைமுறையினர் மேற்கொள்ள வேண்டும் என்ற ஊக்கத்தை அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பெரியார் விருது என்.கிருஷ்ணமூர்த்தி, அண்ணா விருது திருவேங்கடம், பாவேந்தர் விருது அம்பலவாணன், கலைஞர் விருது சங்கரி நாராயணன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் முப்பெரும் விழா நிகழ்வுகள் எழுச்சியோடு நடத்தப்படுகின்றன. தமிழக மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு அடித்தளமிடும் வகையில் முப்பெரும் விழாவினை தி.மு.க.வினர் நடத்த வேண்டும். எந்தப் பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கருணாநிதி நமக்கு வழங்கியிருக்கிறார். அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். தமிழகமெங்கும் சிறக்கட்டும் முப்பெரும் விழா.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Next Story