குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேச்சு
குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் கிடைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
சென்னை,
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த 11-ந்தேதி கன்னியாகுமரியில் ‘பாரத யாத்திரை’ தொடங்கப்பட்டது. 3-வது நாளான நேற்று யாத்திரை குழுவினர் சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரிக்கு வருகை தந்தனர்.
தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி மற்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் கொடியசைத்து கல்லூரியில் யாத்திரையை தொடங்கி வைத்தனர். இதில் நடிகர் தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடிமக்களின் கடமை
பின்னர் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:-
குழந்தைகள் குறித்து சமூகம் பொறுப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அப்பாவிக் குழந்தைகள், பெரியவர்களாக வளரும் வரை நாம் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். உரிய கல்வியை அவர்களுக்கு அளித்தால் பொறுப்புள்ள குடிமக்களாக வளர்வார்கள். எனவே, பாலியல் துன்புறுத்தல் இல்லாமல் குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்து வளர்த்தெடுப்பது ஒவ்வொரு குடிமக்களின் அடிப்படை கடமையாகும்.
குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நிகழ்வுகளை ஒருபோதும் மறைத்திடக் கூடாது. குழந்தைகள் அதுபோன்ற நிகழ்வுகளில் குழந்தைகள் துன்புறுத்தப்படும் போது, அந்தத் தவறுகளை இழைக்கும் குற்றவாளிகள் வெட்கித்தலைகுனிய வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனைகள் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாதுகாப்பான நாடு
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி பேசியதாவது:
குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் கடத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். அனைத்து குழந்தைகளும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்றால், நமது இந்தியாவும் அபாயத்தில் இருக்கிறது என்றே அர்த்தம். எனவே இந்த யாத்திரை, நமது தாய் திருநாடு குழந்தைகளுக்கு பாதுகாப்பான நாடு என்ற நிலையை மீண்டும் எய்துவதற்கு வழி செய்திடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story