எடப்பாடி பழனிசாமி நீக்கம் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கி டி.டி.வி.தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை,
சென்னையில் நடந்த அ.தி.மு.க. (அம்மா-புரட்சித்தலைவி அம்மா) சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலாவை நீக்கி அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அவரால் நியமிக்கப்பட்ட (டி.டி.வி.தினகரன் பொறுப்பு உள்பட) நியமனங்களும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளராக தான் தொடருவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்து, கட்சி சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. (அம்மா) தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக அந்த பொறுப்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார். பொருளாளர் பொறுப்பில் உள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அந்த பொறுப்பில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக அந்த பொறுப்பில் தஞ்சாவூர் எம்.எல்.ஏ. ரெங்கசாமி நியமிக்கப்படுகிறார். இந்த அறிவிப்பு வி.கே.சசிகலா ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.
தளவாய் சுந்தரம்
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்பட்டார். கட்சியில் அவருக்கு அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில், சமீபத்தில் நடந்த அவ ருடைய மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் கலந்துகொள்ளவில்லை. இதேபோன்று எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் தளவாய்சுந்தரமும் பங்கேற்றார். அவர் டி.டி.வி.தினகரன் அணிக்கு எதிராக செயல்படுவது வெளிப்பட்டது. இதையடுத்து அவர் மீது டி.டி.வி.தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொறுப்பில் இருக்கும் அ.தமிழ்மகன் உசேன், அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் தளவாய்சுந்தரம் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story