சென்னை எழிலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
சென்னை,
பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ என்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மேலும், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
காத்திருப்பு போராட்டம்
போராட்டத்தின் தொடர்ச்சியாக அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். இதன்படி நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
சென்னை எழிலகத்தில் நடந்த போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் தாஸ், வெங்கடேஷ், சுப்பிரமணியன் மற்றும் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் செ.முத்துசாமி தொடங்கிவைத்தார்.
சமையல்
போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான உணவு, போராட்டம் நடைபெறும் இடத்திலேயே தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதற்காக பெரிய பாத்திரங்களில் சமையல் செய்யப்பட்டது.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டம்
புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியம் கொண்டு வரவேண்டும். 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளுக்காக பல மாதங்களாக போராடி வருகிறோம். கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்.
இந்த இடத்தை விட்டு வெளியே செல்ல மாட்டோம். அதற்காக தான் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே உணவு சமைக்கிறோம். போராட்டத்திற்கு தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு மாயவன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story