பரோல் கேட்டு சசிகலா விண்ணப்பம் செய்வார் திவாகரன் பேட்டி
ஆஸ்பத்திரியில் இருக்கும் கணவரை பார்ப்பதற்காக பரோல் கேட்டு சசிகலா விண்ணப்பம் செய்வார் என்று திவாகரன் கூறினார்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் அ.தி.மு.க. (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலாவின் தம்பி திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பொதுக்குழு
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரால் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் தங்களது இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறியிருப்பதால் நாங்கள் இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்த பொதுக்குழுவே செல்லாது என தீர்ப்பு வரும் பட்சத்தில் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாது. பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழே மிக குழப்பமான மனநிலையில் தான் அனுப்பி உள்ளனர்.
அ.தி.மு.க(அம்மா) பொதுச் செயலாளராக சசிகலா தான் நீடிக்கிறார். உண்மையான தொண்டர்கள் சசிகலா பக்கமும், டி.டி.வி.தினகரன் பக்கமும் தான் உள்ளனர். சசிகலா அனுமதி பெற்று விரைவில் பொதுக்குழுவை முறைப்படி கூட்டுவோம்.
தி.மு.க.வின் சரியான முடிவு
தற்போது தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடக்கிறது. ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டிய கவர்னர் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? என்று எங்களுக்கு புரியவில்லை.
சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி தமிழக கவர்னருக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடுத்திருப்பது சரியான முடிவாக தான் இருக்கும்.
பரோல் கேட்க சசிகலா விருப்பம்
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருப்பதால் தனது மனைவியை பார்க்க விருப்பப்படுகிறார். இது குறித்த தகவலும், மருத்துவ அறிக்கையும் வக்கீல்கள் மூலம் சசிகலாவிடம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள தனது கணவரை பார்க்க பரோல் கேட்டு விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story