போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்
x
தினத்தந்தி 14 Sept 2017 6:00 AM IST (Updated: 14 Sept 2017 3:48 AM IST)
t-max-icont-min-icon

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

சென்னை, 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக அரசு பள்ளிக்கூட மாணவர் கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பணியை தவிர்த்து மற்ற பணிகளை மேற்கொள்வதாகவும், இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழன்பன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆசிரியர் சங்கங்களை ஏன் தடை செய்யக் கூடாது, ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகைப்பதிவை ஏன் அமல் படுத்தக்கூடாது என்பது உள்பட 20 கேள்விகளை கேட்டு அதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

பாராட்டு

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு ஆசிரியர்கள் பணி சம்பந்தமாக சில கேள்விகளை எழுப்பியதன் மூலம் அரசு பள்ளியில் ஆசிரியர் பணியை மேற்கொள்ளாமல் மற்ற பணிகளை மேற்கொண்டு வந்த ஆசிரியர்கள் முறையாக தங்களது பணியை மேற்கொள்வது தெரியவந்துள்ளது.

அரசு பள்ளியில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த நீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது. தவறு செய்யும் ஆசிரியர்களுக்கே இந்த கோர்ட்டு பல கேள்விகளை எழுப்பி உள்ளது’ என்றார்.

வெட்கி தலைகுனிய வேண்டும்

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘நீட்’ தேர்வால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி, அரசு பள்ளிகளில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற ஒரு நிலையை பார்த்து அரசு பள்ளி ஆசிரியர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றும் கூறினார்.

ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றாமல், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் வரும் காலத்தில் எந்த காரணத்திற்காகவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாதபடி உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும், இந்த போராட்டத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

அவமதிப்பு வழக்கு தொடரப்படும்

ஆசிரியர் சங்கங்களை முறைப்படுத்தும் நேரம் வந்துவிட்டதாகவும், கோர்ட்டு உத்தரவை விமர்சிக்கும் ஆசிரியர்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்த நீதிபதி ஆசிரியர்கள் போராட்டம் சம்பந்தமாக சில கேள்விகளை எழுப்பி உள்ளார். அது வருமாறு:-

* எத்தனை ஆசிரியர் சங்கங்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளன?.

* எத்தனை ஆசிரியர்கள் பணியை புறக்கணித்துள்ளனர்?.

* தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்?.

* தமிழக மக்கள் தொகையில் ஆசிரியர் விகிதாச்சாரம் எவ்வளவு?.

* ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்சம் ஊதியம், அதிகபட்ச ஊதியம் எவ்வளவு?.

* பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது?. தமிழக பட்ஜெட்டில் அது எத்தனை சதவீதம்?.

அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

* தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் எத்தனை பேர் உள்ளனர்?. அவர்களின் ஆண்டு சராசரி வருமானம் எவ்வளவு?.

* தனியார் பள்ளி ஆசிரியர்களைவிட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறதா?.

* ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பாதிப்பு அடைந்துள்ள பள்ளிகள் எத்தனை?

* போராட்டத்தை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?.

மேற்கண்ட கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி இன்று (வியாழக்கிழமைக்கு) தள்ளிவைத்தார்.

நிபுணர் குழு

இதற்கிடையே ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்க தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னையை சேர்ந்த வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story