நெய்வேலியில் 18-ந்தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் கி.வீரமணி அறிவிப்பு


நெய்வேலியில் 18-ந்தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் கி.வீரமணி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Sept 2017 3:15 AM IST (Updated: 16 Sept 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் அனல் மின் நிலையம் அமைய வலியுறுத்தி நெய்வேலியில் 18-ந்தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கி.வீரமணி அறிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனல் மின்நிலையம்

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசின் கீழ் உள்ள ஒரு பொதுத் துறை நிறுவனம். நவரத்தினங்களில் ஒன்று என்று புகழப்படும் லாபம் ஈட்டித் தரும் நிறுவனம். அதன் சார்பில் சீர்காழியில் 4,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையம் ஒன்று ஏற்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. 14,482 கோடி ரூபாய் மதிப்பிலான பெருந்திட்டம் இது. சீர்காழியில் இத்திட்டத்தை நிறுவுவதற்காக, துவக்க ஆய்வாக இதற்கு 50 கோடி ரூபாய் செலவு நிதியும் ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டு உள்ளது.

இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழக அரசுக்கு விற்க தமிழ்நாடு மின் பகிர்வு கழகத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், நெய்வேலி நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டத்தில், இத்திட்டத்தை ஒடிசாவிற்கு மாற்றுவது என்று முடிவு செய்துள்ளார்களாம். மறுபடியும் தமிழ்நாட்டிற்கு ஒரு பெருந்திட்ட இழப்பு-அதனால் ஏற்படும் வேலை வாய்ப்பு இழப்பு-மற்றைய பொருளாதார வளர்ச்சி இழப்பு-வர்ணிக்க இயலாதவை.

ஆர்ப்பாட்டம்

எனவே, இதனை தமிழ்நாட்டு மக்களும், அனைத்து கட்சிகளும், அமைப்புகளும்தான் குரல் கொடுத்து, சீர்காழியிலே துவக்கிட முழு முயற்சி செய்யவேண்டும். தமிழக எம்.பி.க்கள் உடனடியாக பிரதமரை, சம்பந்தப்பட்ட கனரகத் தொழில் மந்திரியை நேரில் சந்தித்து வற்புறுத்தி, தமிழக வளர்ச்சி பறிபோவதைத் தடுக்க முன் வரவேண்டும்.

இதை வலியுறுத்தி தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதைத் தடுக்க நெய்வேலியில் 18-ந்தேதி தேதி காலை 10 மணி அளவில் திராவிடர் கழகத்தின் சார்பில் அறவழியில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம், திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோரின் தலைமைல் நடைபெறும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Next Story