‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு
தாம்பரத்தில் ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாக பா.ஜனதா சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று பேசினார்.
தாம்பரம்,
‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாகவும், ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கண்டித்தும் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் அரசால் ‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்ட போது தி.மு.க. மறுப்பு தெரிவிக்கவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து இருந்தால் ‘நீட்’ தேர்வை ஆதரித்து தற்போது அறிக்கை வெளியிட்டு இருப்பார். தமிழக மக்களுக்கு நலன் செய்வதுதான் பா.ஜனதாவின் குறிக்கோள்.
வேலை வாய்ப்பு
ஜப்பான் உதவியுடன் இந்தியாவில் 4 இடங்களில் தொழில் நகரம் அமைக்கப்படுகிறது. அதில் ஆந்திரா, குஜராத், ராஜஸ்தானை தொடர்ந்து தமிழகமும் இடம் பெற்று உள்ளது. மோடியை எதிர்க்கட்சிகள் கீழ்த்தரமாக விமர்சித்தாலும் தமிழகத்துக்கு வேலை வாய்ப்பு உள்பட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.
அனிதா மரணத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறார்கள். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மாற்று சக்தியாக தி.மு.க. வரமுடியாது. ஒரு தலைமுறை கல்வியை தி.மு.க. சிதைத்து விட்டது.
காலம் கனிந்து வருகிறது
நவோதயா பள்ளிகள் இருந்து இருந்தால் ‘நீட்’ தற்கொலைகள் இருந்து இருக்காது. ‘நீட்’ தேர்வுக்கு பிறகு பல மாவட்டங்களில் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ சீட்டு கிடைத்து உள்ளது. பா.ஜனதாவை தனிமைப்படுத்த முடியாது. மக்களும், மாணவர்களும் எங்களோடு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பா.ஜனதா பலம் பெறும். இந்தி திணிப்பு பொய் முகமூடி போட்டு தி.மு.க. அரசியல் அரங்கில் நுழைந்தால் அதை பா.ஜனதா கிழித்து எரியும். தமிழகத்தை காவிகள் ஆளும் காலம் கனிந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் போராட்டம் என்றும் பலன் தராது. புதிய இந்தியா மட்டும் அல்ல, புதிய தமிழகமும் படைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மோகன ராஜா, பொற்றாமரை சங்கரன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்குன்றம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் எம்.பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சென்னை சிவா முன்னிலை வகித்தார்.
இதில் மாநில செயலாளர் கே.டி.ராகவன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரவீன் எம்.ஜி.ஆர், தேசிய பொதுகுழு உறுப்பினர் ஜானகிராமன், மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.பி.செந்தில்குமார் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தண்டையார்பேட்டை
இதேபோல் சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே வடசென்னை மாவட்ட பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், தேசிய செயற்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதாசுப்பிரமணியன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story