போலீஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


போலீஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்  தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Sept 2017 3:45 AM IST (Updated: 16 Sept 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10½ லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை 1995-ம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கில் பெரியகுளம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலின் போது பாண்டியன் இறந்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தான் பாண்டியனின் சாவுக்கு காரணம் என உதவி கலெக்டர் அறிக்கை அளித்ததை தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்பின்னர், பாண்டியராஜன் இறந்து போனார். தனக்கு விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆயுள் தண்டனையை ரத்து செய்தது. இந்தநிலையில் பாண்டியனின் மனைவி அமராவதி இழப்பீடு கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.10½ லட்சம் இழப்பீடு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மனுதாரரின் கணவர் மரணத்துக்கு தமிழக அரசு ரூ.10½ லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மனுதாரருக்கு அரசு இடைக்கால இழப்பீடாக ரூ.1 லட்சம் ஏற்கனவே வழங்கி உள்ளது. இந்த தொகை போக மீதமுள்ள தொகை ரூ.9½ லட்சத்தில் மனுதாரருக்கு ரூ.4½ லட்சம் வழங்க வேண்டும்.

ரூ.2 லட்சத்தை மனுதாரரின் மகனுக்கும், தலா ரூ.1 லட்சத்தை அவரது 3 மகள்களுக்கும் பிரித்து கொடுக்கவேண்டும். 1995-ம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் இந்த தொகையை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story