திருச்சி முன்னாள் துணைமேயருக்கு 10 ஆண்டு சிறை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


திருச்சி முன்னாள் துணைமேயருக்கு 10 ஆண்டு சிறை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Sept 2017 4:30 AM IST (Updated: 16 Sept 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

ரகசிய திருமணம் செய்து விட்டு, பெண்ணுடன் சேர்ந்து வாழ மறுத்த திருச்சி முன்னாள் துணைமேயர் ஆசிக் மீராவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு அளித்தது.

திருச்சி, 

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆசிக் மீரா (வயது 33). இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் மகன் ஆவார். மரியம் பிச்சை சாலை விபத்தில் சிக்கி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது மகன் ஆசிக் மீராவுக்கு அ.தி.மு.க.வில் கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டன.

2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆசிக் மீரா மாநகராட்சி 27-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா அவருக்கு துணைமேயர் பதவி வழங்கினார். அரசியலில் தொடர்ந்து ஏற்றம் பெற்று வந்த ஆசிக் மீராவின் வாழ்வில் துர்கேஸ்வரி என்ற பெண் மூலம் புயல் வீச தொடங்கியது.

துர்கேஸ்வரி புகார்

துர்கேஸ்வரி திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் சிங் ராணா என்பவரின் மகள். தற்போது 32 வயதான துர்கேஸ்வரி கடந்த 2014-ம் ஆண்டு, கையில் ஒரு பெண் குழந்தையுடன் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.

அதில், “ஆசிக் மீரா என்னை கடந்த 2006-ம் ஆண்டு ரகசிய திருமணம் செய்தார். நானும், அவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். பின்னர் 2011-ம் ஆண்டு அவருக்கு அவரது பெற்றோர் வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர். அதன்பின்னரும் அவர் என்னுடன் குடும்பம் நடத்தினார். இதில் நான் கர்ப்பம் அடைந்தேன். கர்ப்பத்தை கலைக்கும்படி கூறினார்.

போலீசார் வழக்குப்பதிவு

நான் கர்ப்பத்தை கலைக்க முடியாது என்றதால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். எனக்கு குழந்தை பிறந்த பின்னரும் அவர் என்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை. என்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிய ஆசிக் மீரா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறி இருந்தார்.

இந்த மனு மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து துர்கேஸ்வரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். மதுரை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் ஆசிக் மீரா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஆசிக் மீரா துணைமேயர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

நீதிபதி தீர்ப்பு

ஆசிக் மீராவின் நண்பர்கள் சந்திரபாபு என்கிற வி.எஸ்.டி.பாபு (32), சரவணன் (28), ஆசிக் மீராவின் மாமியார் மைமுன் பேகம் (55) ஆகியோர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திருச்சி மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டீன் விசாரித்தார். இதில் சாட்சிகள் விசாரணை, வழக்கறிஞர்கள் வாதம் முடிவடைந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிக் மீராவுக்கு 5 பிரிவுகளின் கீழ் 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெசிந்தா மார்ட்டீன் தீர்ப்பு கூறினார்.

சிறை தண்டனை

ஆசிக் மீராவுக்கு 5 பிரிவுகளிலும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு மொத்தம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதால், அவர் 10 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை அனுபவிப்பார்.

அதேபோல் சரவணன், மைமுன் பேகம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாபுவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிப்பார்கள். அபராத தொகைகளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் கட்ட தவறினால் ஒவ்வொருவரும் தலா ஒரு வருடம் முதல் 3 ஆண்டுகள் வரை கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

நீதி வென்றுவிட்டது

பின்னர், பெண் போலீசார் மைமுன் பேகத்தை திருச்சி மகளிர் சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்றனர். ஆசிக் மீரா உள்பட 3 பேரும் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தீர்ப்பு குறித்து துர்கேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், ‘நீதி வென்று விட்டது. ஆசிக் மீரா மூலம் பிறந்த என் மகளுக்கு தற்போது 3½ வயது ஆகிறது. ஆசிக் மீராவின் முதல் மனைவி என்ற அடிப்படையில், எனது மகளுக்கும், எனக்கும் வாழ்வாதாரத்துக்கான சொத்துரிமைகளை கேட்டு கூடுதல் மகளிர் கோர்ட்டில் தனியாக வழக்கு தொடருவேன்’ என்றார். 

Next Story